பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
03:06
ஆப்ரிக்காவில், டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் தேவ ஊழியம் செய்து வந்தார். அவரைச் சந்திக்க இங்கிலாந்து நிருபர் ஸ்டான்லி சென்றார். அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசினர். தன் பணி முடிந்ததும் ஸ்டான்லி, டேவிட்டிடம், நீங்கள் என்னோடு இங்கிலாந்து வந்து விடுங்கள். இதை விட்டால் உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைக்காது. அங்கு வந்தால் உங்கள் புகழ் மேலும் கூடும், என்றார். டேவிட் மறுத்து விட்டார். ஸ்டான்லி கிளம்பிச் சென்றதும், தனது டைரியில், நான் என்ன தியாகம் செய்து விட்டதாக ஸ்டான்லி நினைத்தார்! மக்களும், நான் ஆப்ரிக்காவிற்கு மிஷனரியாக வந்ததை பெரிய தியாகம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர். உண்மையில், இயேசுகிறிஸ்து, தனது பிதாவாகிய தேவனுக்கு சமமாய் இருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, தம்மைத் தாமே தாழ்த்தி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷகுமாரனாக இந்த பூமிக்கு வந்தாரே... அதுவல்லவா தியாகம்! அதற்கு இணையான தியாகம் எதுவுமில்லையே! ஆகவே, நான் செய்தது தியாகமல்ல. நமக்காக தமது ஜீவனைக் கொடுத்த அவருக்கு, ஊழியம் செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பே பெரிய பாக்கியம், என்று எழுதினார். ஆம்... ஆண்டவரின் தியாகத்துக்கு முன்னால், நமது செயல்பாடுகள் தியாகம் என்று சொல்வதற்கு அருகதையற்றவை என்றால் அது மிகையல்ல.