பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
11:06
கும்பகோணம் மகாமகம் விழாவிற்காக, சிறப்பு விருந்தினர் இல்லம் கட்ட, அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது பொதுப்பணித் துறை. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், 2016, பிப்ரவரியில் மகாமகம் விழா நடக்கிறது. கடந்த, 1996ல் நடந்த இந்த விழா, மீண்டும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடக்க உள்ளது. மகாமகத்தின் போது, ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட, பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் தங்க, வி.ஐ.பி., விருந்தினர் இல்லம் கட்ட, பொதுப்பணித் துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதனால், கட்டட மாதிரி வரைபடம் தயாரிப்பு உட்பட, ஆரம்ப கட்ட பணிகளை, கடந்த ஐந்து மாதங்களாக, பொதுப்பணித் துறையின் கட்டடங்கள் பிரிவினர் மேற்கொண்டனர். மேலும், விருந்தினர் இல்லத்தை, ஐந்து கோடி ரூபாய் செலவில் கட்டவும், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், இதற்கான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மகாமகம் விழாவுக்கு இன்னும், ஏழு மாதங்களே உள்ளது. கடைசி நேரத்தில், நிதி ஒதுக்கினால், எப்படி பணிகளை முடிப்பது என்ற கவலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆழ்ந்துள்ளனர். நமது நிருபர்