பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
05:06
பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் அவையில் அலனவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர், அரசனின் அனுமதியின்றி, மக்கள் வரிப்பணத்தில் சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டினார். கோபம் கொண்ட மன்னன், அமைச்சரைச் கொல்ல ஆணையிட்டான். வருந்திய அமைச்சர் உயிர் விடும்முன், தன் உடலை திருமங்கலக்குடியில் புதைக்கும்படி வேண்டிக்கொண்டார். அதன்படி சேவகர்கள் ஒரு பல்லக்கில் அமைச்சரின் சடலத்தை எடுத்துக் கொண்டு சென்றனர். அமைச்சரின் மனைவி இறைவனிடம் முறையிட்டு அழுதாள். அப்போது, உனக்கு மாங்கல்யப்பாக்கியம் தந்தோம். கவலை வேண்டாம்! என்ற குரல் கேட்டது. அதிசயிக்கத் தக்கவகையில், அலனவாணரின் உயிர் வந்ததோடு வெட்டுப்பட்ட தலையும், உடலும் ஒன்றானது. உயிர் பெற்ற மந்திரி ஓடிப்போய் இறைவனைக் கட்டிக் கொண்டு அழுதார். அன்றுமுதல் இறைவனுக்கு, பிராணநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. அமைச்சரின் மனைவியின் மாங்கல்யம் நிலைக்க அருள்செய்த அம்பிகைக்கும், மங்கலநாயகி என்ற பெயர் வந்தது. அமைச்சரின் மனைவி அம்பிகையிடம், எனக்கு அருள் செய்ததுபோல, உலகில் உள்ள பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்க அருள வேண்டும், என வேண்டினாள். இன்றும் நாடிவரும் அனைவருக்கும் மாங்கல்யபலம் பலம் அருளும் தலமாக இக்கோயில் விளங்குகிறது.