தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது புறநானுõற்றுச் செய்யுள். நாம் துன்பப்படுவதும் மகிழ்ச்சியடைவதும் நம் மனதின் செயல்பாடுகளால் தான். அதாவது மனம் ஒரு விஷயத்தின் மீது ஆசைப்பட்டால் நமது அறிவு சிந்தித்து செயல்பட வேண்டும். ஆசைப்படுவது தவறு என்றால், நம் மனதை அறிவு கட்டுப்படுத்த வேண்டும். நியாயமான ஆசை என்றால் அதை அடைவதற்கான நல்ல வழிமுறைகளை அது நமக்கு உணர்த்த வேண்டும். மனம் ஆசைப்படுவதும் அறிவு முடிவெடுப்பதும் எல்லோருக்கும் இயல்பாக நிகழ்ந்து வரும் ஒன்று தான். அறிவு நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதைத்தான் சுயக்கட்டுப்பாடு என்று குறிப்பிடுகிறார்கள். நாம் இன்பம் என்று எண்ணி ஆசைப்படுவது தவறான விஷயமாக இருந்தால் இது வேண்டாம், இது தவறு என்று அறிவு நமக்கு கண்டிப்பாய் உணர்த்துகிறது. நல்லவர்கள் அறிவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நிஜமான சுகத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறார்கள். தீயவர்கள் அறிவின் கட்டுப்பாட்டை மீறி ஆசைப்பட்டதை அடைய தாமும் துன்பப்பட்டு பிறரையும் துன்புறத்துகிறார்கள். எனவே, நிஜமான சுகத்தை அளிப்பது தெளிவான சிந்தனை தான்.