பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
05:06
விந்தியமலை அடிவாரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகிய ஏழு கன்னிகையரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த விச்வாவசு என்ற கந்தர்வன் அவர்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினான். அவன் கிளம்பியவுடன் நதிதேவதைகளுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கந்தர்வன் யாருக்கு நமஸ்காரம் செய்தான்? என்று புரியாமல் தவித்தனர். கந்தர்வனிடமே சென்று கேட்டும் விட்டனர். அவனோ, உங்களில் யார் பெரியவரோ அவருக்குத் தான் என் நமஸ்காரம் என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தான். இதைக்கேட்டதும் மற்றவர்கள் அமைதியாய் இருக்க, கங்கையும் காவிரியும் தங்களுக்குள் பெரியவர் யார் என்ற சர்ச்சையைக் கிளப்பினர். விஷயம் பிரம்மாவிடம் சென்றது. பிரம்மா கங்கையே உயர்ந்தவள் என்று தீர்ப்பளித்தார். உடனே, காவிரி கோபம் கொண்டு பூலோகத்தில் சாரக்ஷேத்திரம் என்னும் திருச்சேறையில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்யத் தொடங்கினாள். அவள் முன்தோன்றிய விஷ்ணு, உன் விருப்பப்படியே ஆகட்டும். கங்கையை விட நீயே புனிதமானவள், என்ற வரத்தை தந்து ஏற்றுக்கொண்டார். இந்த அடிப்படையிலேயே தொண்டரடிப்பொடியாழ்வார், தன் பாசுரத்தில், கங்கையின் புனிதமான காவிரி! என்று இந்நதியைப் போற்றிப் பாடியுள்ளார்.