தேவாரம் பாடிய மூவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இம்மூவரில் திருநாவுக்கரசரே காலத்தால் முந்தியவர். இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார். இளம்வயதில் சமணசமயத்தைப் பின்பற்றிய தன் பெயரைத் தருமசேனர் என்று மாற்றிக் கொண்டார். இவருடைய சகோதரி திலகவதியாரின் முயற்சியால், மீண்டும் சைவசமயத்தைப் பின்பற்றினார். அப்போது அவருக்கு நாவுக்கரசர் என்ற பெயர் ஏற்பட்டது. ஞானசம்பந்தர் இவரைத் தந்தைபோல் மதித்து அப்பரே! என்று அழைத்ததால் அப்பர் என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய அவதாரத்தலம் திருவாமூர். பண்ருட்டியிலிருந்து 6கி.மீ., தொலைவில் உள்ளது. திருவாமூரில் பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் பற்றி தேவாரப்பாடலில் பாடல்கள் இடம் பெறவில்லை. ஆனால், பசுபதி திருவிருத்தம் என்னும் பெயரில் சில பாடல்களை நாவுக்கரசர் பாடியுள்ளார்.