வாரியார் இளைஞராக இருந்தபோது, சென்னையில் தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை பயின்று வந்தார். ஒருநாள் மாலை நேர அனுஷ்டானம்(ஆத்மார்த்த பூஜை) செய்வதற்காக காவாந்தண்டலம் என்பவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தார். பாம்பன் சுவாமிகளின் பக்தராக இருந்த அவ்வீட்டு அம்மையார்,இங்கு ஒரு மகான் இருக்கிறார். நாங்கள் அவரைத் தரிசிக்க இப்போது செல்கிறோம். நீங்களும் வாருங்கள், என்று அழைத்தார். முன்னை செய்த தவத்தின் பயனாலே எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது என்று வாரியார் இந்நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார். நம்புல்லையர் தெருவில் ஒருவீட்டின் மேல்மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகையில் பரமஞான தவசியாக பாம்பன் சுவாமிகள் அமர்ந்திருந்தார். நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சமாலையும், கண்களில் ஞானஒளியும் துலங்கியது. மாடிப்படியை இடித்துவிட்டு பலகாலம் மாடியிலேயே யாருடைய தொடர்பும் இல்லாமல் பாம்பன் சுவாமிகள் தவத்தில் இருந்தவர். நனவிலும், கனவிலும் முருகனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர். அப்போது அவர், அசோக சாலவாசம் என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார். அவர் முன்னால் பேராசிரியர் ராஜா தங்கவேல்பிள்ளை கைகட்டி வாய்பொத்தி நின்றிருந்தார். பேராசிரியரிடம் பாம்பன் சுவாமிகள், அசோகன் வாழ்ந்த ஊரிலே தீமையே இல்லாமல் போனதற்கு காரணம் என்ன தெரியுமா? என்று தான் எழுதிய கவிதைக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பதில் தெரியாமல் அமைதியாக இருக்க, பாம்பன் சுவாமிகளே பதிலளித்தார். தீமை என்னும் சொல் சிதைந்து, தீ என்னும் நெருப்பு குலமாதரின் கற்புத்தீயாகவும், மை என்பது அவர்களின் கண்மையாகவும் மாறிவிட்டது. அதனால் தீமை என்பதே இல்லாமல் போய்விட்டது என்று விளக்கம் தந்தார். பாம்பன் சுவாமிகளின் பெருமையை அப்போதே அறியாமல் போனேனே! இல்லாவிட்டால் அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு ஞானம் பெற்றிருப்பேன் என்று கூறுகிறார் வாரியார்.