தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது சங்கநிதி, பதுமநிதி என்னும் இருவகை நிதிகள் வெளிப்பட்டன. அவற்றை குபேரனிடம் கொடுத்தருள் புரிந்தார் பெருமாள். அன்றுமுதல் குபேரர் நிதிகளுக்கு அதிபதியானான். இதனால், குபேரனுக்கு ஆணவம் உண்டானது. அவனைப் பாவங்கள் சூழ்ந்தன. ஐஸ்வர்யங்கள் அவனை விட்டு நீங்கின. தவறை உணர்ந்த குபேரன், சப்தரிஷிகளிடம் சென்று நிதியை மீட்க தகுந்த உபாயம் கூறும்படி வேண்டினான். அவர்கள் குபேரனிடம், இழந்த நிதிகளையும் செல்வங்களையும் பெறவேண்டுமானால் பூலோகத்தில் இருக்கும் சோமதீர்த்தத்தில் நீராடி, சனத்குமாரேஸ்வரரைப் பூஜித்து வரும் கூடி கூறினர். குபேரனின் வழிபாட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், இழந்த நிதிகளை மீண்டும் குபேரனுக்கு அருளினார். அப்போது இறைவனிடம் குபேரன் ஒரு வரத்தையும் பெற்றான். என்னைப் போல் செல்வத்தை இழந்து தவிப்பவர்கள் இங்கு வந்து வணங்கினால், அவர்களுக்கும் அவ்வாறே அருள்செய்வாயாக! என்றொரு விண்ணப்பம் வைத்தான். இறைவனும் குபேரன் கேட்டவரத்தையும் தந்து மறைந்தார். இந்த சிவாலயம் கும்பகோணம்- திருநள்ளார் ரோட்டிலுள்ள திருத்தண்டிகைபுரம் என்னும் ஊரில் உள்ளது. இது குபேரஸ்தலம் ஆகும். சனத்குமாரேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை சவுந்தர்யநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பவுர்ணமி பூஜை சிறப்பாக நடக்கிறது.