சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூருக்கு வாரியார் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். பன்னிரு திருமுறைகளை நமக்குத் தந்த நம்பியாண்டார்நம்பி அவதரித்த திருத்தலம் அவ்வூர். இங்கிருக்கும் பொல்லாப்பிள்ளையார் வெகு பிரசித்தமானவர். அக்கோயிலில் சொற்பொழிவாற்றியதோடு மட்டுமில்லாமல் அங்கு நடந்த தேவார விழாவிலும் கலந்து கொண்டார். களைப்பினால் ஒருவர் வீட்டின் திண்ணையில் தேவார இசை கேட்டுக் கொண்டே துõங்கிவிட்டார். அதிகாலையில் காணும் கனவிற்கு நற்பலன் உண்டு என்பார்கள். காலை நான்கு மணிக்கு வாரியாரின் கனவில் பாம்பன் சுவாமிகள் தோன்றினார். அவரை சீடராக ஏற்றுக்கொண்டு, ஆறெழுத்து மந்திரமான சடாட்சரத்தை உபதேசித்து அருள் செய்தார். அன்றுமுதல் பாம்பன் சுவாமிகளை, வாரியார் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். தன் வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் நடுவில் இருக்க, ஒருபுறம் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரையும், மறுபுறம் பாம்பன் சுவாமிகளையும் வைத்து வழிபடத் தொடங்கினார். வாரியார் வழிபாடு செய்யும் நேரத்தில், பாம்பன் சுவாமிகளின் திருவருளை எண்ணிய அளவில் கண்கள் இரண்டும் குளமாகிவிடும். இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த இரண்டாவது அருணகிரிநாதராக பாம்பன் சுவாமிகள் இருந்ததாக குறிப்பிடுகிறார். பாம்பன் சுவாமிகளின் சமாதிக்கோயில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. அவருடைய சமாதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மயூரவாகனசேவையிலும், குருபூஜையிலும் தவறாமல் பங்கேற்று, சொற்பொழிவாற்றுவதை பெரும் பாக்கியமாகக் கருதினார்.