பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
12:06
கரூர்: ""கரூர் நகரில் நடுநாயகமாக விளங்கும் பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும், என்று, திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன் தெரிவித்தார். திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன், கூறியதாவது, கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் தொன்மையான கோவிலாகும். இக்கோவில் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகும். இதன் முன்புறம் ஏழு நிலையில் கம்பீரமாக, இக்கோவில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 2018ல் கும்பாபிஷேகம் நடக்கின்ற நிலையில், ராஜகோபுரத்தில் ஏராளமான செடிகள் முளைத்துள்ளன. இச்செடிகளை அப்புறப்படுத்த, இன்ஜக்ஷன் முறைப்படி வேதிவினைப் பொருட்களை செலுத்தினால் மட்டுமே, நிரந்தரமாக வேர் வளர்வதை கட்டுப்படுத்த முடியும். அதற்கென தேர்ச்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு, செடிகளின் வேர்களை நீக்கினால் ராஜகோபுரம் பாதுகாப்பாக இருக்கும். எனவே, செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, ராஜகோபுரத்தை பாதுகாக்க வேண்டும். அதேபோல், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், புதிதாக கடைகள் கட்டப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக கட்டிடங்கள் மாறியுள்ளது. கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.