பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1. மதி: இஹ குணஸக்தா பந்தக்ருத் தேஷு அஸக்தாது
அம்ருதக்ருத் உபருந்தே பக்தியோகஸ்து ஸக்திம்
மஹதநு கமலப்யா பக்தி: ஏவாத்ர ஸாத்யா
கபிலதநு: இதி த்வம் தேவஹுத்யை ந்யகாதீ:
பொருள்: குருவாயூரப்பனே! மூன்று குணங்களையும் ஆதாரமாகக் கொண்டு விளங்கும் புத்தியானது (பொருள்கள் மீது பற்று உள்ள புத்தி) ஸம்ஸார பந்தத்தை உண்டாக்குகின்றது. ஆனால் பற்று நீக்கிய புத்தி என்பது உயர்ந்த மோட்சத்தை அளிக்க வல்லது. பற்று அற்ற புத்தியை உண்டாக்குவது என்பது பக்தியோகம் மூலமே ஆகும். பக்தியோகம் பற்றுதலை தடுத்து நிறுத்த வல்லது. மஹான்களைப் பின்பற்றுவதன் மூலம் பக்தியோகம் கிட்டுகிறது. இந்த பக்தியோகம் என்பது இந்த உலகில் மட்டுமே கிட்டக்கூடியது என்று இவ்வாறு கபிலராகத் தோன்றிய நீ உனது தாயான தேவஹுக்கு உபதேசித்தாய் அல்லவா?
2. ப்ரக்ருதி மஹத் அஹங்காரம் ச மாத்ரா: ச பூதாநீ
அபி ஹ்ருதபி தசாக்ஷீ புருஷ: பஞ்சவிம்ச:
இதி விதித விபாக: முச்யதே அஸௌ ப்ரக்ருத்யா
கபிலதநு: இதி த்வம் தேவஹுத்யை ந்யகாதீ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரக்ருதி, அஹங்காரம் ஆகியவை; பஞ்ச பூதங்களின் காரணமான வாசனை, சுவை, உருவம், தொடு உணர்ச்சி மற்றும் ஓசை என்னும் தந்மாத்ரைகள்; பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள்; மனம், கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐந்து ஞான இந்த்ரியங்கள்; பேச்சு, கை, கால், மர்மகுறிகள், மலமூத்திரக்குறிகள் என்னும் கர்ம இந்த்ரியங்கள் - ஆகிய இவற்றுடன் இணைந்த ஜீவன் இருபத்து ஐந்தாவது தத்துவமாகும். இப்படியாக இந்த வேறுபாடுகளை உணர்ந்த மனிதன் இந்தப் ப்ரக்ருதியின் பிடியில் உள்ள அறியாமையில் இருந்து விடுபடுகிறான் என்று கபிலரான நீ உனது தாய்க்கு உபதேசம் செய்தாய் அல்லவா?
3. ப்ரக்ருதிகத குணௌகை: நாஜ்யதே பூருஷ: அயம்
யதி து ஸஜதி தஸ்யாம் தத்ருணா: தம் பஜேரந்
மதநு பஜந தத்வ ஆலோசநை: ஸாபி அபேயாத்
கபிலதநு: இதீ த்வம் தேவஹுத்யை ந்யாகதீ:
பொருள்: குருவாயூரப்பா! பொதுவாக இந்த ஆத்மாவானது ப்ரக்ருதியின் குணங்களால் தொடப்படாததாகவே உள்ளது. ஆனால் பற்று உடையவனாக மாறும்போது உடல் முதலானவற்றின் குணங்கள் ஆத்மாவை பற்றிக் கொள்ளும். ஆனால் அவை என்னிடம் பக்தி செலுத்தி, வேதாந்தங்களை பாராயணம் செய்வதன் மூலம் அகன்றுவிடும். இப்படியாக கபிலரான நீ உன் தாயிடம் உபதேசம் செய்தாய் அல்லவா?
4. விமலமதி: உபாத்தை: ஆசாநாத்யை: மதங்கம்
கருட ஸமதிரூடம் திவ்ய பூஷா யுதாங்கம்
ருசிதுலித தமாலம் சீலயேத் அநுவேலம்
கபிலதநு: இதி த்வம் தேவஹுத்யை ந்யகாதீ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! யோகம் மற்றும் ஆஸனங்களைப் பயில்பவன் மனத்தெளிவு பெறுகிறான். அப்படிப்பட்டவன் என்னுடைய திருமேனியை கருடன் மீது உள்ளதாகவும், பலவிதமான ஆபரணம் மற்றும் ஆயுதங்கள் கொண்டதாகவும், தமால மலர் போன்று நீல நிறம் உடையதாகவும், எப்போதும் த்யானித்து இருக்க வேண்டும் என்று நீ உபதேசம் செய்தாய் அல்லவா?
5. மம குண கண லீலா கர்ணநை: கீர்த்தநாத்யை:
மயி ஸுரஸரி தோக ப்ரக்யா சித்தாநு வ்ருத்தி
பவதி பரம பக்தி: ஸாஹி ம்ருத்யோ: விஜேத்ரீ
கபிலதநு இதி த்வம் தேவஹுத்யை நியாகதீ
பொருள்: குருவாயூரப்பனே! பரம் பொருளான என் திருக்கல்யாண குணங்களையும், எனது லீலைகள் அடங்கிய சரிதங்களையும், என்னுடைய திருநாமங்களையும் எப்போதும் த்யானித்து வந்தால் போதுமானது. அவை கங்கையின் வெள்ளம் தடைபடாமல் ஓடுவது போல் என்னிடம் தடையற்ற பக்தியை உண்டாக்கும். இந்த பக்தியானது யமனைக்கூட அருகில் வரமுடியாமல் தடுத்து நிறுத்த வல்லது என்று உபதேசம் செய்தாய்.
6. அஹஹ பஹுல ஹிம்ஸா ஸஞ்சிதார்த்தை: குடும்பம்
ப்ரதிதினம் அநுபுஷ்ணன் ஸத்ரீஜித: பாலலாலீ
விசதி ஹி க்ருஹ ஸக்த: யாதநாம் மயி அபக்த:
கபிலதநு: இதி த்வம் தேவஹுத்யை ந்யாகாதீ:
பொருள்: குருவாயூரப்பனே! அன்றாடம் பலவிதமானவர்களையும் துன்புறுத்தி தானும் இம்சையை அனுபவித்து பொருளை ஈட்டுகிறான். எதற்காக? தன்னுடைய குடும்பத்தைக் காப்பதற்காக ஆகும். இவன் பெண்களால் வெல்லப்பட்டவனாகவும், பிள்ளைகளை சீராட்டுபவனாகவும், தனது வீட்டின் மீது அதிகமான ஆசை உள்ளவனாகவும் இருக்கிறான். இதனால் இவனுக்கு என்மீது பக்தி இல்லாமல் போகிறது. இப்படிப்பட்டவன் நரகத்தையே அடைகிறான்! கஷ்டம்! கஷ்டம்! என்று நீ உபதேசம் செய்தாய் அல்லவா?
7. யுவதி ஜடரகின்ன: ஜாதபோதோபி அகாண்டே
ப்ரஸவ களித போத: பீடயா உல்லங்க்ய பால்யம்
புநரபி பத முஹ்யத்யேவ தாருண்யகாலே
கபிலதநு: இதி த்வம் தேவஹுத்யை ந்யகாதீ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருவன் தனது தாயின் கர்ப்பத்தில் உள்ளபோது மிகவும் சிரமப்படுகிறான். (ஆகாரங்களால் உண்டாகும் தொல்லைகள், அசுத்தமான மலமூத்ரங்களால் தொல்லைகள், கிருமிகளால் தொல்லை). அந்த ஜீவன் ஏழு மாதம் கழிந்த பின்னர் (கர்ப்பத்தில்) ஞானம் அடைகிறான். இருந்தாலும் தனது துயரங்களை நீக்கும் திறன் இல்லை. அவன் பிறந்தவுடன் இப்படிக் கிடைத்த ஞானத்தையும் இழந்து விடுகிறான். இதனால் தனது பால்யத்தில் பல துன்பங்களை அனுபவிக்கிறான். தனது வாலிபப் பருவத்தில் பலவிதமான மோகங்களால் பீடிக்கப்பட்டுத் தவிக்கிறான்! கஷ்டம்! என்று உபதேசித்தாய் அல்லவா?
8. பித்ரு ஸுர கணயாஜீ தார்மிக: ய: க்ருஹஸ்த:
ஸ ச நிபததி காலே தக்ஷிணாத் வோபகாமீ
மயி நிஹிதம அகாமம் கர்ம து உதக்பதார்த்தம்
கபிலதநு: இதி த்வம் தேவஹுத்யை ந்யகாதீ:
பொருள்: குருவாயூரப்பனே! பித்ருக்களையும், தேவர்களையும் பூஜித்துக் கொண்டும், தனது தர்மங்களைச் செய்பவனும் இப்படியாக உள்ள க்ருஹஸ்தன் (இல்லறத்தில் உள்ளவன்) இறந்த பின்னர் தெற்குத் திசையில் சென்று விடுகிறான். அவன் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்தவுடன் இந்தப் பூமியில் வந்து மீண்டும் பிறக்கிறான். ஆனால் என்னிடம் சமர்ப்பணம் என்று செய்யப்பட்ட விருப்பம் இல்லாத கர்மம் உடையவன் வடக்காகச் செல்கிறான் ( அவன் மீண்டும் பிறப்பதில்லை) என்று நீ உபதேசித்தாய் அல்லவா?
9. இதி ஸுவிதித வேத்யாம் தேவ ஹே தேவஹுதிம்
க்ருதநுதிம் அனுக்ருஹ்ய த்வம் கத: யோகி ஸங்கை:
விமலமதி: அத அஸௌ பக்தி யோகேன முக்தா
த்வம் அபி ஜனஹிதார்த்தம் வர்த்தஸே ப்ராகுதீச்யாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! இப்படியாக அறிய வேண்டியவை அனைத்தையும் உன் தாய் தேவஹுதி நன்றாக அறிந்தாள். அவளுக்கு இப்படி அனுக்ரகம் செய்த பின்னர் நீ சாதுக்களுடன் சென்று விட்டாய். தெளிவான ஞானம் பெற்ற தேவஹுதி தன்னுடைய பக்தியோகத்தின் மூலம் மோட்சம் பெற்றாள். நீ மக்களின் நன்மைக்காக வடகிழக்குத் திசையில் உள்ளாய் அல்லவா?
10. பரம கிமு பஹுத்யா த்வத் பாதாம்போஜ பக்திம்
ஸகலபல விநேத்ரீம் ஸர்வகாமோப நேத்ரீம்
வதஸிகலு த்ருடம் த்வம் தத்விதூய ஆமயாந் மே
குருபவநபுரேச த்வயி உபாதத்ஸ்வ பக்திம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! குருவாயூரில் வசிப்பவனே! பரம்பொருளே! மேலும் மேலும் கூறுவதால் என்ன பயன்? உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பற்றுவதே, அதில் பக்தி வைப்பதே அனைத்து பயங்களையும் நீக்கும் என்றும், நமது விருப்பம் அனைத்தும் நிறைவேற்றும் என்றும் நீ உறுதியாகக் கூறுகிறாய் அல்லவா? என்னுடைய அனைத்து வ்யாதிகளையும் நீக்கி உன்னிடம் பக்தி கொண்டவனாக மாற்ற வேண்டும். இதற்கான அன்பை நீயே உருவாக்க வேண்டும்.