பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
05:07
1. ப்ராசேதஸ: து பகவந் அபர: ஹி தக்ஷ:
த்வத் ஸேவநம் வ்யதித ஸர்க விவ்ருத்திகாம:
ஆவிர்பபூவித ததா லஸதஷ்டபாஹு:
தஸ்மை வரம் ததித தாஞ்ச வநூம் அஸிக்னீம்
பொருள்: குருவாயூரப்பனே! பகவானே! ப்ரசேதஸர்களின் மகனான தக்ஷன் அல்லாமல் வேறு ஒரு தக்ஷன் என்பவன் தனது குலத்தை வ்ருத்தியடைய வைப்பதற்காக உன்னைக் குறித்து ஹம்ஸகுஹ்யம் என்ற மந்திரத்தால் ஆராதனை செய்தான். இதனால் மகிழ்வுற்ற நீ அவன் முன்பாக எட்டுக் கைகளுடன் தோன்றினாய். அவனுக்கு வரம் அளிக்கும் வகையாக அஸிக்னீ என்ற பெண்ணை மனைவியாக அளித்தாய் அல்லவா?
2. தஸ்ய ஆத்மஜா: து அயுதம் ஈச புன: ஸஹஸ்ரம்
ஸ்ரீநாரதஸ்ய வசஸா தவ மார்க்கம் ஆபு;
நைகத்ர வாஸம் ருஷயே ஸ முமோச சாபம்
பக்த உத்தம: துருஷி: அநுக்ரஹம் ஏவ மேநே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தக்ஷனுக்கு முதலில் பத்தாயிரம் புதல்வர்களும் பின்னர் ஆயிரம் புதல்வர்களும் தோன்றினர். (இந்தப் பதினாயிரம் பேரும் ஹர்யச்வர்கள் என்று அழைக்கப்பட்டனர்) (இங்கு ஒரு சிறு குறிப்பு காண்போம். இவர்களை ஸ்ருஷ்டித் தொழிலில் ஈடுபடுமாறு தக்ஷன் பணித்தான். அவர்களும் அதற்காக குருவாயூரில் உள்ள நாராயணசரஸ் குளத்தின் அருகே வந்தனர். குளத்தில் மூழ்கி எழுந்தவுடன் அவர்கள் எண்ணம் மாறிவிட்டது. அவர்களுக்கு மோக்ஷ உபாயம் எது என்று ஆராயும் மனம் ஏற்பட்டது).
அப்போது அங்கு வந்த நாரத முனிவரின் உபதேசம் கேட்டு அவர்கள் மோட்ச வழியை அடைந்தனர். இதனைக் கேள்விபட்ட தக்ஷன் கோபம் கொண்டு நாரதரை நோக்கி, உனக்கு நிலையான இடம் இல்லாமல் போகும் என்று சபித்தான். பக்தர்களில் உத்தமரான நாரதரும் அந்தச் சாபத்தை நன்மை என்றே கொண்டார்.
3. ஷஷ்ட்யா ததோ துஹித்ருபி: ஸ்ருஜத: குலௌகான்
தௌஹித்ர ஸுனு: அத தஸ்ய ஸ விச்வரூப:
த்வத் ஸ்தோத்ர வர்மிதம் அஜாபயந் இந்த்ரம் ஆஜௌ
தேவ த்வதீய மஹிமா கலு ஸர்வஜைத்ர:
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் தக்ஷன் அறுபது பெண்களைப் பெற்று அவர்கள் மூலம் தனது வம்சத்தைப் பெருக்கினான். (அந்தப் பெண்கள் அதிதி, திதி போன்றவர்கள் ஆவர். இவர்கள் மூலம் மீன், பாம்பு, பல்லி, பசு, எருமை ஆகிய மிருகங்கள் உண்டானது). தக்ஷனின் பெண்வழிப்பேரன் விச்வரூபன் என்பவன் ஆவான். (இவன் திதி என்பவளின் மகனான த்வஷ்டாவிற்கும் ரசனை என்பவளுக்கும் பிறந்தவன்). இவன் இந்திரனுக்கு உனது மந்திரமான நாராயண கவசம் என்பதை உபதேசித்து இந்திரனை தேவாஸுர யுத்தத்தில் ஜெயிக்க வைத்தான். ஸ்ரீ அப்பனே! உனது வல்லமை அனைத்தையும் வெல்லும் அல்லவா? (நாராயண கவசம் என்பது நமது எதிரிகளிடம் இருந்து நம்மைக் காப்பதாகும்).
4. ப்ராக் சூரஸேன விஷயே கில சித்ரகேது:
புத்ராக்ரஹீ ந்ருபதி: அங்கிரஸ: ப்ரபாவாத்
லப்த்வா ஏக புத்ரம் அத தத்ர ஹதே ஸபத்னீ
ஸங்கை: அமுஹ்யத் அவச: தவ மாயயா அஸௌ
பொருள்: குருவாயூரப்பனே! முன்பு ஒரு காலத்தில் சூரஸேன நாட்டை சித்ரகேது என்பவன் ஆண்டு வந்தான். மிகவும் புகழ் பெற்ற அவன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அவன் அங்கிரஸ முனிவரின் வலிமையால் ஒரு மகனைப் பெற்றான். ஆனால் அந்த மகன் அரசனின் மற்ற மனைவிகளால் (பொறாமை காரணமாக) கொல்லப்பட்டான். அதனால் உனது மாயையால் அந்த அரசன் மிகவும் துக்கத்தை அடைந்தான்.
5. தம் நாரத: து ஸமம் அங்கிரஸா தயாலு:
ஸம்ப்ராப்ய தாவத் உபதர்ச்ய ஸுதஸ்ய ஜீவம்
கஸ்ய அஸ்மி புத்ர இதி தஸ்ய கிரா விமோஹம்
த்யக்த்வா த்வதர்ச்சன விதௌ ந்ருபதிம் ந்யயுங்கத
பொருள்: குருவாயூரப்பனே! அந்த நேரத்தில் மிகவும் இளகிய மனம் படைத்த நாரதர், அங்கிரஸ முனிவரோடு அங்கு வந்தார். அந்த அரசனிடம் தனது யோக பலத்தால் இறந்த குழந்தையின் ஜீவாத்மாவைக் காண்பித்தார். பின்னர் அந்த ஜீவாத்மா, நான் யாருடைய குழந்தை? என்று கேட்கும்படி செய்தார். இதன் மூலம் அரசனின் அஞ்ஞானத்தை நீக்கி உனது ஆராதனையில் திருப்பினார்.
6. ஸ்தோத்ரம் ச மந்த்ரம் அபி நாரதத: அத ஸப்த்வா
தோஷாய சேஷவபுஷோ நநு தே தபஸ்யன்
வித்யாதர அதிபதிதாம் ஸ ஹி ஸப்த ராத்ரே
லப்த்வாபி அயகுண்டமதி: அன்வபஜத் பவந்தம்
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் சித்ரகேது நாரத முனிவரால் ஸ்தோத்ரத்தையும் மந்திரத்தையும் அறியப் பெற்றான். (நாரதர் உபதேசித்த ஸ்தோத்ரம் - ஓம் நமஸ்துப்யம் பகவதே வாஸுதேவாய தீமஹி ப்ரத்யும்னா யானிருத்தாய நம: ஸங்கர்ஷணாய ச - என்பதாகும். இதன் பொருள் - பகவானே! வாஸுதேவனான உனக்கு வணக்கங்கள்; ப்ரத்யும்னன், அநிருத்தன், ஸங்கர்ஷணன், ஆகியோராகத் தோன்றிய உனக்கு நமஸ்காரம்). (நாரதர் உபதேசித்த மந்திரம் - பகவதே மஹா புருஷாய மஹானுபவாவாய மஹா விபூதிபதயே ஸகல ஸாத்வத பரிவ்ருட நிகர கரகமல குட்மலோபலாலித சரணாரவிந்த யுகள பரம பரமேஷ்டின்னமஸ்தே). இதன் மூலம் சித்ரகேது, ஆதிசேஷ உருவமாக உள்ள உனது மகிழ்வுக்காக கடுமையான தவம் புரிந்தான். இதனால் ஏழே நாட்களில் (வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து) வித்யாகரர்களுக்குத் தலைவனாக உள்ள பதவி பெற்றான். அப்படி உயர்பதவி பெற்ற பின்னரும் தனது அறிவு மயங்காமல் உன்னை வணங்கி வந்தான்.
7. தஸ்மை ம்ருணால தவலேன ஸஹஸ் ர சீர்ஷ்ணா
ரூபேண பத்த நுதி ஸித்த: கணாவ்ருதேந
ப்ராதுர்பவன் அசிரத நுதுபி: ப்ரஸந்ந:
தத்வா ஆத்ம தத்வம் அநுக்ருஹ்ய திரோததாத
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது நீ தாமரைத் தண்டு போன்று வெண்மையான ஆயிரம் தலைகளுடன் கூடியதும். புகழ்பாடும் சித்தர்கள் கூட்டம் சுற்றி நிற்பதுமான ஆதிசேஷன் உருவம் கொண்டாய். அத்தோற்றத்துடன் விரைவாக அரசன் முன்பு தோன்றினாய். அவனது துதிகளைக் கண்டு மகிழ்வுற்ற நீ அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தாய் அல்லவா?
8. த்வத் பக்த மௌலிரத ஸோபி ச லக்ஷலக்ஷம்
வர்ஷாணி ஹர்ஷுலமனா: புவனேஷு காமம்
ஸங்காபயன் குணகணம் தவ ஸுந்தரீபி:
ஸங்காதிரேக ரஹித: லலிதம் சசார
பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய பக்தர்களில் உயர்ந்தவனான சித்ரகேது உனது தரிசனத்தாலும் உபதேசத்தாலும் நிறைந்த மனம் அடைந்தான். உனது திருக்கல்யாண குணங்களை வித்யாதர பெண்கள் மூலம் பாடல்களாகப் பாடச் செய்தான். மேலும் இன்ப துன்பங்களில் பற்றில்லாமல் இந்த உலகில் பல லட்ச ஆண்டு உலவி வந்தான்.
9. அத்யந்த ஸங்க விலயாய பவத் ப்ரணுந்ந:
நூனம் ஸ ரூப்ய கிரிம் ஆப்ய மஹத் ஸமாஜே
நிச்சங்கம் அங்கக்ருத வல்லபம் அங்கஜாரிம்
தம் சங்கரம் பரிஹலன் உமயா அபிசேபே
பொருள்: குருவாயூரப்பனே! ஒரு முறை சித்ரகேது வெள்ளியாக உள்ள கயிலாய மலைக்குச் சென்றான். அங்கு முனிவர்கள் சூழ்ந்துள்ள சபையில், சிறிதும் தயக்கம் இல்லாமல் தனது மடியில் பார்வதியை அமர்த்தியிருந்தவரும், மன்மதனை எரித்தவரும் ஆகிய சிவனை பரிகாசம் செய்தான். இதனால் அவன் பார்வதியால் சபிக்கப்பட்டான். ( பார்வதி அவனை அரக்கனாகப் பிறப்பாய் என்று சபித்தாள். அவனும் வ்ருத்ரன் என்ற அரக்கனாகப் பிறந்தான்) இப்படி நிகழ்ந்தும் சித்ரகேதுவிற்கு உலகப்பற்று நீங்கவேண்டும் என்று நீ எண்ணியதால் ஆகும்.
10. நிஸ்ஸம்ப்ர மஸ்த்வயம் அயாசித சாபமோக்ஷ:
வ்ருத்தாஸுரத்வம் உபகம்ய ஸுரேந்த்ரயோதீ
பக்த்யா ஆத்ம தத்வ கதநை: ஸமரே விசித்ரம்
சத்ரோ: அபி ப்ரமம் உபாஸ்ய கத: பதம் தே
பொருள்: குருவாயூரப்பனே! இதனால் சித்ரகேது சிறிதும் மனம் தளரவில்லை. அவன் பார்வதியிடம் சாபவிமோசனமும் வேண்டி நிற்கவில்லை. வ்ருத்ரன் என்ற அரக்கனாகப் பிறந்த அவன், இந்திரனுடன் யுத்தம் புரிந்தான். (யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது) தனது பக்தியாலும் ஆத்ம தத்துவ உபதேசத்தாலும் அவன் இந்திரனின் அஞ்ஞானத்தை நீக்கினான். இறுதியாக உனது இடமான வைகுண்டத்தைப் பெற்றான். (இவை அனைத்தையும் ஆச்சர்யம் (விசித்ரம்) என்கிறார்).
11. த்வத் ஸேவனேன திதி: இந்த்ர வதோத்யதாபி
தாந் ப்ரத்யுத இந்த்ர ஸுஹ்ருதோ மருத: அபிலேபே
துஷ்டாசயேபி சுபதைவ பவந்நிஷேவா
தத்தாத்ருச: த்வம் மாம் பவனாலயேச
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்திரனைக் கொல்வதற்காக ஒரு மகனைப் பெற திதி (கச்ய ப்ரஜாதிபதியின் மனைவி) முடிவு செய்தாள். ஆனால் உன்னை அவள் வணங்கியதால் அந்தக் குழந்தை மருந்துகளாக மாறின. ஆக தீய எண்ணங்கள் மனதில் இருந்தாலும் உன்னை வணங்கினால் அவை மங்களகரமாக மாறி விடுகின்றன. இத்தனை பெருமை உடைய நீ என்னைக் காப்பாயாக!