பதிவு செய்த நாள்
17
ஜூலை
2015
04:07
சதாசர்வ காலமும் நாம சங்கீர்த்தனம் மட்டுமே நடந்து கொண்டு இருக்கும் ஒரு இடம், பண்டரீபுரக்ஷேத்திரம்தான். அங்கே அருள்பாலிக்கிற பாண்டுரங்கனின் அருளைப் பூரணமாகப் பெற்றவர் சந்த் துக்காராம். பண்டரீநாதனோட செல்லப்பிள்ளை நாமதேவர், எப்பவும் பாகவத அடியோர்களோட சத்சங்கத் தோடவேதான் இருக்கணும்னு ஆசைப்பட்டவர் அவர். பாண்டுரங்கனின் சன்னிதியில் முதல் படியில் படுத்துக்கொண்டே பகவானோடு ஐக்கியமாயிட்டார் அவர். அதுக்கு நாமதேவர் படி என்று பெயர். வைகுண்டம் போன நாமதேவருக்கு அந்த இடமே பிடிக்கலை, ஏன் என்றால், அங்கே ஹரி நாம சங்கீர்த்தனம், இல்லை, அதனால் பாண்டுரங்கன்கிட்ட ஒரு வரம் கேட்கிறார்; அடுத்த ஜென்மத்தில் நான் உன் மீது சத கோடி அபங்கம் பாடணும், உன் மீது மட்டுமே விசுவாசம் கொண்டவனாகவே இருக்கணும் என்று பிரார்த்திக்க, அதன்படியே அடுத்த ஜென்மாவில் அவர் துக்காராமாகத் தோன்றினார்.
பண்டரீ க்ஷேத்திரத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் சொல்லுவது. பண்டரீக்கு நிகரான வேறு க்ஷேத்திரமே இல்லை; விட்டலனுக்குச் சமமான தெய்வம் வேறில்லை; துக்காராமுக்குச் சமமான குருவும் கிடையாது என்று சொல்லுவார்கள். அந்த துக்காராம் 1655ம் ஆண்டு மஹாராஷ்ட்ராவில் தேஹூங் என்கிற கிராமத்தில் அவதாரம் பண்ணினார். 45 வருடங்கள் மட்டுமேதான் இவர் பூமியில் வாழ்ந்தார். தன்னோட 20,22 வயது வரைக்கும் சாமானிய மனிதராகத்தான் இருந்தார் துக்காராம். கல்யாணம் பண்ணிக்கொண்டு, குழந்தைகளுக்குத் தந்தையாகி, குடும்பத்தொழிலான மளிகை வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார். ஊரில் ஏற்பட்ட கோரமான பஞ்சத்தில் அவரது மொத்த குடும்பத்தினர்களும் இறந்து விட, வாழ்க்கையில் அவருக்கு ஒரு விரக்தி ஏற்பட்டது. தன் கிராமத்தில் உள்ள மலையின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு அமைதியற்ற நிலையில், ஏகநாதரின் க்ரந்தங்களைப் படிக்கிறார். அப்போது அவரது மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி ஏற்படுகிறது. பகவானை எப்படியாவது பார்க்கணும் என்கிற ஆசையும் கூடவே வந்தது.
ஒரு நாள் இந்திராணி நதிக் கரையோரம் இவர் உட்கார்ந்து கொண்டு இருந்தபோது, பாபாஜி சைதன்யர் அங்கு வந்து, இவரது காதில், ராமக்ருஷ்ண ஹரி என்று உபதேசம் பண்ணினார். துக்காராமுக்கு ஒரே சந்தோஷம் நாம் சிறு வயது முதலே எந்த நாம ஜபத்தை விடாமல் ஜபித்து வருகிறோமோ, அதே நாமத்தை இவர் நமக்கு உபதேசித்து இருக்கிறாரே என்று சந்தோஷம். குருநாதர் மீது அவ்வளவு அபங்கங்களைப் பாடியிருக்கிறார் துக்காராம். துக்காராமுக்கு ஒரு மளிகை கடை இருந்தது அந்தக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு அவர் வியாபாரத்தைப் பார்த்தார் என்று கேட்டா அதுதான் இல்லை, அந்தத் தொழிலை விட்டுடுங்கோ என்று சொன்னால், அது எப்படி ஸ்வதர்மத்தை, குல தர்மத்தை விட்டுவிட முடியும் என சொல்லுவார். மாதத்தில் ரெண்டு அல்லது மூணு நாட்கள் போனாபோகுது என்று கடையைத் திறப்பார். ஜீஜாபாய்க்கு இவர் வியாபாரம் பண்ற சாமர்த்தியம் நன்றாகத் தெரியும். அதனால், நானும் உங்களோடு கடையில் உட்கார்ந்து வியாபாரம் பண்றேன் என்று அவர் சொன்னால், ஸ்த்ரீகள் கடைகளில் வந்து உட்காரக்கூடாது. நானே பார்த்துக்கிறேன் சொல்லி அவளை அனுப்பி விடுவார்.
கடையில் இருக்கும் மளிகை சாமான்களையே திரும்பத் திரும்ப பார்த்துவிட்டு, என்னப்பா பாண்டு ரங்கா, உன்னைப் பார்க்க வேண்டிய கண்களால் இந்த உப்பையும், மிளகாவையும் பார்க்க வைத்துவிட்டாயே புலம்புவார். ராம க்ருஷ்ண ஹரி நாம ஜபம் பண்ண ஆரம்பித்திவிடுவார். ஊர் முழுக்க துக்காராம் கடையத் திறந்து வைத்திருக்கிறார் செய்தி பரவ ஆரம்பித்ததும், அத்தனை நாள் வரைக்கும் நெத்திக்கு இட்டுக் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, துக்காராம் கடையில் போயி மளிகை வாங்கிக்கனும் ஜோரா நெத்தியில் இட்டுக்கொண்டு வருவாங்க. நேரா கடைக்கு வந்து, ராம க்ருஷ்ண ஹரி, உப்பு என்ன விலை கேட்க, ஓ பாகவத னேன்னு சொல்லி, வந்தவர்களை கீழே விழுந்து வணங்கி உங்களுக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக் கோங்கோ சொல்லிவிடுவார் துக்காராம். அப்புறம் என்ன ஆகும் கடையில் இருக்கிற அத்தனை சாமான்களும் காலியாயிடும் துக்காராமுக்கு ஏக சந்தோஷமா போயிடும். ஜீஜாபாய் வருவாள், கடையில் இருந்த சாமான்கள் எல்லாம் கலியாகி இருக்கிறதைப் பார்த்து அவளும் சந்தோஷப்படுவாள். ஆனா, கல்லாப் பெட்டி காலியாயிருக்கும். அதைப் பார்த்ததுமே அவளோட ஒட்டுமொத்த சந்தோஷமும் காணாம போயிடும். பாகவதாகிட்ட நான் எப்படி காசு வாங்க முடியும் துக்காராம் அதுக்கு ஒரு விளக்கம் வேற கொடுப்பார். ஜீஜாபாய் ரொம்ப ஏதாவது கேட்டா, ஒரு பத்து நாட்கள் பண்டரீபுரத்துக்கு போயிடுவார். இந்தக் குடும்பத்தைப் பார்த்துக்க வேண்டியது பாண்டுரங்கனின் பொறுப்பு என்று பொறுப்பை ரொம்ப ஈஸியா பகவான் மீது போடுவார். அவரது நம்பிக்கை வீண் போகலை. அந்தப் பாண்டுரங்கன் அவரையும் சரி; அவரது குடும்பத்தினர்களையும் சரி, கைவிடவே இல்லை.