பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015
11:07
திருப்பூர்: ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, திருப்பூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.ஆடி மாதம், அம்மனுக்கு மிக உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தில், பெரும்பாலான அம்மன் கோவில்களில் குண்டம், தேர்த்திருவிழா, சாட்டு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோவில்களில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் பகுதி அம்மன் கோவில்களில், காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் இருந்தனர். அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவில்களில் சிறப்பு பூஜைக்கு பின், கூழ் வழங்கப்பட்டது. நேற்று மதியத்துக்கு பிறகும், பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.திருப்பூர் நெசவாளர் காலனி ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில், வேப்பிலைக்காரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். முத்தணம்பாளையம் அங்காளம்மனுக்கு, தங்கக்காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டிருந்தது.
செரீப் காலனி குங்குமமாரியம்மன், அங்காளம்மன் அலங்காரத்திலும்; இந்திரா நகர் முத்துமாரியம்மன், ரூபாய் நோட்டு மாலைகளுடன் கனகதாரா அலங்காரத்திலும்; தாராபுரம் ரோடு மாகாளியம்மன், சந்தனகாப்பு மலர் அலங்காரத்திலும்; வளம் பாலம் செல்லாண்டியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்தனர்.அவிநாசி: அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரச மரத்தடி விநாயகர் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக, கூழ் வழங்கப்பட்டது.வாணியர் வீதியில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில், சேவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், மடத்துப்பாளையம் ரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில், வ.உ.சி., காலனி காமாட்சியம்மன் கோவில், பார்க் வீதி சவுடேஸ்வரி அம்மன் கோவில் என, வட்டாரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தாமரைக்குள கரையில் உள்ள கன்னிமார் சன்னதியில், திருமணமாகாத பெண்கள், விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். அதேபோல், ஆகாசராயர் கோவில், பூண்டி காமாட்சியம்மன் கோவிலிலும், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள் கூறுகையில், "ஆண்டு முழுவதும் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும், ஆடி வெள்ளிக்கு எப்போதுமே தனிப்பெருமை உண்டு. விரதமிருந்து, ஆடி வெள்ளிக்கிழமை நாளில், அம்மனை தரிசித்தால், எண்ணிய காரியம் ஈடேறும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றனர்.