பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
11:07
கும்பகோணம்: நாச்சியார்கோவில் கடைவீதியில் நேற்று காலை முதல் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் கடைவீதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்தது. நேற்று காலை, கும்பகோணம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, ஊராட்சி செயலர்கள் ரமேஷ், குருமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர். நாச்சியார்கோவில் சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, வடக்குவீதி ஆகிய பகுதிகளில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த தளங்கள், கொட்டகைகள், சுவர்கள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தள்ளப்பட்டது. சாலையில், இடையூறாக இருந்த, சில கொடிக்கம்பங்களும் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், சாலையின் நடுவில் இடையூறாக உள்ள மின்கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.