பதிவு செய்த நாள்
13
ஜூலை
2011
11:07
திருச்சி: ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷத்தையொட்டி, திருச்சியில் உள்ள சிவன், விஷ்ணு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.சிவன், விஷ்ணு, முருகன் என அனைத்து தெய்வங்களுக்கும், ஆனி மாதத்தில் செய்யப்படும் திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது. திருமஞ்சன நாளில், வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புமிக்க ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷ விழா திருச்சியில் நேற்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவில், ராமர்குளம் கரியமாலீஸ்வரர் கோவில், உத்தமர்கோவில், மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில், உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி கோவில், இ.பி., சாலை பூலோகநாத ஸ்வாமி கோவில் உள்ளிட்ட அனைத்து சிவ ஸ்தங்களும் நந்தியம்பெருமான் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடந்தன. பின்னர், ரிஷப வாகனத்தில் அம்மனுடன் சிவன் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விஷ்ணுக்கும் உகந்தது: பிரதோஷ நேரத்தில் அவதரித்ததால், பிரதோஷ காலம் நரசிம்மருக்கு உகந்தது. பிரதோஷ காலத்தில் வைணவர்கள், ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.