பதிவு செய்த நாள்
07
ஆக
2015
04:08
1. ஆலோக்ய சைல உத்தரண ஆதிரூபம்
ப்ரபாவம் உச்சை: தவ கோப லோகா:
விச்வ ஈச்வரம் த்வாம் அபிமத்ய விச்வே
நந்தம் பவந் ஜாதகம் அந்வப் ருச்சந்
பொருள்: குருவாயூரப்பா! ப்ருந்தாவனத்தில் இருந்த அனைத்து கோபர்களும் நீ மலையைத் தூக்கி நின்றது. மேலும் பலசெயல்களை நிகழ்த்தியது வியப்பை அளித்தன. அவர்கள் நீ சாதாரண மனிதன் அல்லன், அந்த ஸர்வேஸ்வரன் என்றே நினைத்தனர். ஆகவே அந்த சந்தேகம் பூர்த்தியாக உனது தந்தையிடம் உனது ஜாதகத்தைப் பற்றிக் கேட்டனர்.
2. கர்க உதித: நிர்கதித: நிஜாய
வர்க்காய: தாதேந தவ ப்ரபாவ:
பூர்வ அதிக: து அபி அநுராக: ஏஷாம்
ஐதிஷ்ட தாவத் பஹுமாந பார:
பொருள்: குருவாயூரப்பனே! உடனே அவர்களிடம் உனது தந்தை, தன்னிடம் முன்பு ஒரு நாள் கர்க்கர் என்ற முனிவர் கூறிய உனது பெருமைகளை எடுத்து உரைத்தார். அந்த நிமிடத்தில் இருந்து ஆயர்களுக்கு உன் மீது இருந்த அன்பும் பக்தியும் பல மடங்காக மாறியது.
3. தத: அவமாந உதித தத்வ போத:
ஸுர அதிராஜ: ஸஹ திவ்ய கவ்யா
உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்ட கர்வ:
ஸ்ப்ருஷ்ட்வா பத அப்ஜம் மணி மௌளிநா தே
பொருள்: குருவாயூரப்பா! உன்னால் இப்படி ஓர் அவமானம் அடைந்த இந்திரன், உன்னைப் பற்றி அறிந்து கொண்டான். தனது கர்வத்தை விட்டான். காமதேனுவையும் உடன் அழைத்துக் கொண்டு உன்னிடம் வந்தான். உனது தாமரை போன்ற சிவந்த அழகிய பாதங்களில் தனது க்ரீடத்தை தாழ்த்தி வணங்கினான்.
4. ஸ்நேஹ ஸ்நுநை: த்வாம் ஸுரபி: பயோபி:
கோவிந்த நாம அங்கிதம் அப்ய ஷிஞ்சத்
ஐராவத உபாஹ்ருத திவ்ய கங்கா
பாதோபி: இந்த்ர: அபி ச ஜாத ஹர்ஷ:
பொருள்: குருவாயூரப்பா! உன் மீது கொண்ட அன்பின் மிகுதியால், கோவிந்தன் என்ற பெயர் உடைய உனக்கு அந்தக் காமதேனு பால் அபிஷேகம் செய்தது. இதனைக் கண்ட இந்திரனும் மனம் மகிழ்ந்தான். தனது ஐராவதத்தின் மீது கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் நீரினால் உனக்கு அபிஷேகம் செய்தான்.
5. ஜகத் த்ரயீ ஈசே த்வயி கோகுல ஈசே
ததா அபிஷிக்தே ஸதி கோப வாட:
நாகே அபி வைகுண்ட பதே அபி அலப்யாம்
ச்ரியம் ப்ரபேதே பவத: ப்ரபாவாத்
பொருள்: குருவாயூரப்பா! மூன்று உலகிற்கும் அதிபதியான நீ கோகுலத்தின் நாயகனாக முடிசூடப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டாய். இதன் மூலம் கோகுலமானது, வைகுண்டம் மட்டும் அல்லாது பரம பதத்திற்கும் மேலான மேன்மை அடைந்தது.
6. கதா சித் அந்த: யமுநம் ப்ரபாதே
ஸ்தாயந் பிதா வாருண பூருஷேண
நீத: தம் ஆநேதும் அகா: புரீம் த்வாம்
தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப:
பொருள்: குருவாயூரப்பா! ஒருநாள் விடியற்காலைப் பொழுதிற்கு முன்பு உனது தந்தை நந்தகோபர் யமுனையில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது வருணனின் தூதன் ஒருவன் அவனை வருண லோகத்திற்கு இழுத்து சென்று விட்டான். அப்போது மானுட உருவம் உடைய நீ உனது தந்தையை அழைத்து வர வருண லோகம் சென்றாய்.
7. ஸஸம்பரமம் தேந ஜல அதிபேந
ப்ரபூஜித: த்வம் ப்ரதிக்ருஹ்ய தாதம்
உபாகத: தத் க்ஷணம் ஆத்ம கேஹம்
பிதா அவதத் தத் சரிதம் நிஜேப்ய:
பொருள்; குருவாயூரப்பா! உன்னுடைய வருகையைக் கண்டு மகிழ்ந்த வருணதேவன் மிகுந்த ஆர்வத்துடன் உன்னை வரவேற்றுத் துதித்தான். நீ உடனே உனது தந்தையை அழைத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்குத் திரும்பினாய். உனது தந்தை இந்த நிகழ்ச்சியை தனது உறவினர்கள் அனைவருக்கும் கூறினார் அல்லவா?
8. ஹரிம் விநிச்சித்ய பவந்தம் ஏதாந்
பவத் பத ஆலோகந பத்த த்ருஷ்ணாந்
நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத்
துராபம் அந்யை: த்வம் அதீத்ருச: தாந்
பொருள்: குருவாயூரப்பா! விஷ்ணுவே! உன்னுடைய உறவினர்களும் நண்பர்களும் ஆகிய ஆயர்கள் நீ அந்த மஹாவிஷ்ணு என்று உறுதியாக முடிவு செய்தனர். உன்னிடம் உனது இருப்பிடமான வைகுண்டத்தைத் தங்களுக்குக் காண்பிக்கும்படி கேட்டனர். நீயும் அவர்களுக்கு, யாராலும் எளிதில் அடைய இல்லாத அந்த வைகுண்டத்தைக் காண்பித்தாய் அல்லவா?
9. ஸ்புரத் பர ஆநந்த ரஸ ப்ரவாஹ
ப்ரபூர்ண கைவல்ய மஹா பயோதௌ
சிரம் நிமக்நா: கலு கோப ஸங்கா:
த்வயா ஏவ பூமந் புந: உத்த்ருதா: தே
பொருள்: குருவாயூரப்பா! பூர்ணமானவனே! இதனைக் கண்ட அந்த கோபர்கள் அனைவரும் பேரானந்தம் கொண்டவர்களாக, மோட்சம் என்ற பெருங்கடலில் மூழ்கி உள்ளவர்களாக அந்த வைகுண்டத்தை அனுபவித்தனர். பின்னர் நீ அவர்களை அந்த நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தாய் அல்லவா?
10. கர பதரவத் ஏவம் தேவ குத்ர அவதாரே
நிஜ பதம் அநவாப்யம் தர்சிதம் பக்தி பாஜாம்
தத் இஹ பசுப ரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத் பர ஆத்மா
பவந புர நிவாஸிந் பாஹி மாம் ஆமயேப்ய:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய இருப்பிடமான வைகுண்டத்தை வேறு எந்த அவதாரத்திலும் நீ இப்படி உள்ளங்கை நெல்லிக்கனியாக உனது அடியார்களுக்குக் காண்பித்தது கிடையாது. இடைச் சிறுவனாக வந்த நீயல்லவா, இப்படிக் காண்பித்தாய்? இப்படிப்பட்ட நீ சாட்சாத் அந்த பரம்பொருளே! என்னுடைய பிணிகளை நீக்குவாயாக!