ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் வெளியூர் பக்தர்கள் குவியத் துவங்கியுள்ளனர். ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் புறப்பாடும், மண்டபங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மேலும், தினசரி கோயிலில் பல்வேறு ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஐந்தாம் திருநாளான இன்று இரவு 10 மணிக்குமேல் ஐந்து கருடசேவை நடக்கிறது. இதனை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை, சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்திருந்து, பல்வேறு மண்டபங்களில் தங்கியுள்ளனர். மேலும்,ஏழாம் திருநாளான நாளை மறுநாள் வெள்ளிகிழமை இரவு 8மணிக்குமேல் 11 மணிவரை சயன திருக்கோலம் நடக்கிறது. இதனை காண மேலும் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் ஆண்டாள் கோயில் திருவிழா மிகவும் களைகட்டியுள்ளது.ரத வீதிகள், மாட வீதிகளில் மாலை 5மணிக்குமேல் பக்தர்கள் அதிகளவில் காணப்படுகிறது. வரும் 16ந்தேதி ஞாயிற்றுகிழமை காலை 8.05 மணிக்கு திருஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா ஆகியோர் செய் துள்ளனர்.