பதிவு செய்த நாள்
17
ஆக
2015
11:08
உத்திரமேரூர்:குருமஞ்சேரியில், ஆடிப்பூரத்தையொட்டி, அப்பகுதி முத்து மாரியம்மன் கோவிலில், 108 குடம் பால் அபிஷேக விழா நேற்று, கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியத்தில், சீட்டஞ்சேரி மற்றும் குருமஞ்சேரி கிராமத்திற்கு சொந்தமான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பூர விழாவையொட்டி, இக்கோவிலில் நேற்று காலை 11:30 மணிக்கு, பால் அபிஷேக விழா நடந்தது. முன்னதாக காலை 8:00 மணிக்கு, சீட்டஞ்சேரி மற்றும் குருமஞ்சேரி பகுதிகளில் உள்ள சந்தியம்மன், சடையம்மன், கெங்கையம்மன், துர்க்கையம்மன் ஆகிய அம்மன் கோவில்களில் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, அப்பகுதி காளீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் துவங்கி, அங்கு பால் குடங்கள் நிரப்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, 108 பால் குடங்களை அப்பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் தலையில் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, 11:30 மணிக்கு, முத்து மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பால் அபிஷேகத்தை தொடர்ந்து, அன்னதானம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.