பதிவு செய்த நாள்
19
ஆக
2015
12:08
இப்புவியில், சமூக கட்டமைப்புடன் மனிதர்கள் வாழ்வதற்கு, திருமண பந்தம் மிக அவசியம். இதில், மணம் என்கிற சொல், மண் என்கிற வேர்ச்சொல்லில் பிறந்தது. மண்ணுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு. அதையே மண் மணம் என்கின்றனர், தமிழர்கள். இல்லறத்துக்கு நுழைவாயிலாக அமைவதை, மணம் என்கிற சொல்லால் குறிப்பதன் நோக்கம், நிலத்தைப்போலவே, மணமக்கள், பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை பெற வேண்டும் என்பது சான்றோர் கருத்து.புட்டபர்த்தி பகவான் சத்ய சாயிபாபா உருவாக்கிய, ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள், பல்வேறு சமூக சேவைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி, திருப்பூர் மாவட்டம் சார்பில், மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், மரக்கன்று நடுவது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு என பல்வேறு சேவைகளை தாமாக முன்வந்து செய்து வருகிறது.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 10 கிராமங்களை தத்தெடுத்து, பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மாணிக்காபுரத்தில், 95 வீடுகள் உள்ளன. அதில், 90 வீடுகளில் அடிப்படையான கழிப்பிட வசதி இல்லை. ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி அன்பர்கள் ஒருங்கிணைந்து, அக்கிராமத்தில் உள்ள, 90 வீடு களுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
"வலது கை கொடுப்பது; இடது கைக்கு தெரியக்கூடாது என்கிற, பகவான் சாயிபாபா வாக்குக்கு ஏற்ப, இச்சமூகத்துக்கும், மக்களுக்கும் நலன் தரும், பணிகளை, அமைதியுடனும், ஆத்ம திருப்தியுடனும் மேற்கொண்டு வருகின்றனர். பாபாவின், 90வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 21ல், 90 தெய்வீக திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; திருப்பூர், வால்பாறை, கோட்டூர், மேட்டுப்பாளையம், உடுமலையை சேர்ந்த மணமக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வரும், 21ல், திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள குமாரசாமி மண்டபத்தில், ஒரே மேடையில் திருமண விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம், சப்தமி திதியும், சுவாதி நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய, சுபயோக சுபதினத்தில், காலை, 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், சாயிபாபா அருளாசியுடன் திருமணம் நடைபெற உள்ளது. விழா முன்னேற்பாடுகள், 20ம் தேதி இரவு முதல் நடைபெறும். மணமக்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு, தயார்படுத்தப்படுவர். தொடர்ந்து, 21ம் தேதி காலை திருமணம் நடைபெறும் வகையில், விழா ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 21ம் தேதி காலை, 5:00 மணி முதல், ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம், வேதபாராயணம், ஸ்ரீசாயி பஜன் நடக்கும். தொடர்ந்து, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. மறக்காதீங்க! வரும், 21ல் நடைபெறும் இத்திருமண விழாவில் பங்கேற்க, நேரம் ஒதுக்கி, நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.