கோபத்தை குறைக்க விஜயகாந்த் சிறப்பு யாகம்: விஸ்வாமித்திரர் கோயிலில் மனைவியுடன் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2015 12:08
திருநெல்வேலி: தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், கோபத்தை குறைப்பதற்காக விஸ்வாமித்திரர் கோயிலில் நடக்கும் சிறப்பு யாகத்தில் பங்கேற்கிறார். தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் நேற்று மாலை 4.45 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தனர். விமானநிலையம் அருகே உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். அவரது வருகை குறித்து தே.மு.தி.க.,வின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கு கூட தெரிவிக்கப்படாமல் இருந்தது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் விஜயாபதி. இங்கு கடற்கரையையொட்டி விஸ்வாமித்திரர் கோயில் உள்ளது. விஸ்வாமித்திரருக்கு உள்ள தனிக்கோயிலாகும் இது. தாடகை என்னும் அரக்கியை அழிக்க ராமர், லட்சுமணர் ஆகியோரை இங்கிருந்துதான் விஸ்வாமித்திரர் அழைத்துச்சென்றதாக இக்கோயிலின் தலவரலாறு கூறுகிறது. இங்கு யாகம் மேற்கொண்டால், தேவையற்ற கோபதாபங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமாம். விஜயகாந்திற்கு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த தினமாகும். இன்று 20ம் தேதி நட்சத்திரப்படி அவரது பிறந்த தினம் என கூறப்படுகிறது. எனவே இன்றைய தினத்தில் விஸ்வாமித்திரர் கோயிலில் யாகமும் தரிசனமும் மேற்கொள்வது அவரது அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வாக அவரது கட்சியினர் பார்க்கின்றனர். இந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து கிளம்பும் அவர் தரிசனத்திற்கு பிறகு பிற்பகலில் மதுரைக்கு காரில் கிளம்புகிறார். அங்கிருந்து மாலையில் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.