பதிவு செய்த நாள்
01
செப்
2015
12:09
ஆனைமலை: ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில், ஆயிரக்கணக்கான தம்பதியினர் பங்கேற்றனர். ஆனைமலை அடுத்துள்ள ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில், வேதாத்தரி மகரிஷியின் துணைவியார் லோகாம்பாளின் பிறந்த நாளை, மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின், 101 வது ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் கந்தசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குனர் முருகன் பேசினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர் தாமோதரன் மனைவி நல வேட்பு உரை நிகழ்த்தினார். விழாவில் பங்கேற்ற தம்பதியர், கணவன் மனைவிக்கு மலரையும், மனைவி கணவனுக்கு கனியையும் அளித்து மலர் கனி பரிமாற்றம் செய்து கொண்டனர். தொடர்ந்து பேச்சாளர், பாரதி பாஸ்கர் பேசுகையில், அன்பு அளிக்கப்படும் இடத்தில் சொர்க்கமும், கோபம் வெளிப்படும் இடத்தில் நரகமும் நிலவுகிறது. பெண்களை பெருமைப்படுத்திய விழாவாக இவ்விழா உள்ளது. கணவன் மனைவியிடம், புரிதல், விட்டுக்கொடுத்தல், இருந்தால் அங்கு அன்பு நிலவுகிறது. மனைவியை மதிக்கத்தெரிந்த கணவன் ஈகோ பார்ப்பதில்லை. கணவனிடம் அன்பு செலுத்தும் மனைவி கோபம் கொள்வதில்லை, என்றார். அறிவுத்திருக்கோவிலின் அறங்காவலர் பச்சையப்பன் நன்றி கூறினார்.