பதிவு செய்த நாள்
05
செப்
2015
12:09
ராசிபுரம் அடுத்த, கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பண்ணையம்மன் கோவிலில், ஆண்டு தோறும் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, செப்டம்பர், 9ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று, நள்ளிரவு, 12 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. 5.9.15 அதிகாலை, 5 மணிக்கு கொடியேற்றுதல், உற்சவ அம்மன் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (செப்., 6) முதல், செப்டம்பர், 8ம் தேதி வரை, பகல், 12 மணிக்கு மூலவர் அம்மன் மற்றும் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அதையடுத்து, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
செப்டம்பர், 9ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, உற்சவ அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 3 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர். செப்டம்பர், 10ம் தேதி, பகல், 12 மணிக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 3 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல், தேர்நிலை அடைதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், இரவு, 8 மணிக்கு, அம்மன் சத்தாபரணம், வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
செப்டம்பர், 11ம் தேதி, காலை, 6 மணிக்கு, உற்வச அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அதைதொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.