பதிவு செய்த நாள்
08
செப்
2015
05:09
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு, நாளை (செப். 9ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான முதல் யாகசாலை பூஜை, நேற்றிரவு துவங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வெள்ளி கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. யாகசாலையில் உபநாச்சியார்களுடன் நம்பொருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலையில், தங்க ஆதிஷேசன் வாகனத்தில், தங்க குடத்தில் புனித நீர் வைக்கப்பட்டுள்ளது. காலை, 11.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
நாளை (செப். 9ல்) காலை, 5:40 மணிக்கு, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில், பக்தர்களுக்கு தேவையான வசதிகளும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.