திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள பெரியானைக் கணபதிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் உள்ள ஜெயகணபதி, விஜயகணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் நேற்று காலை, வெள்ளி கவசத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. மாலை சோழி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு மூஷிக வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது. இதேபோல் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் சோடசோபசார தீபாராதனை, இரவு முத்து விமானத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது.