பதிவு செய்த நாள்
18
செப்
2015
12:09
நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில், 40 நாட்களாக பூட்டி வைத்திருந்த மாரியம்மன் கோவில், திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், மாரியம்மன், செல்லியம்மன், தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன், அங்காளம்மன், வரதராஜ பெருமாள், விநாயகர் மற்றும் பிடாரி அம்மன் ஆகிய ஏழு கோவில்களும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பிரச்னையால், கடந்த, ஆகஸ்ட், 10ம் தேதி முதல், மாரியம்மன் கோவிலை பூட்டியதால், பொதுமக்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த, 40 நாட்கள் வழிபாடு செய்யப்படாமல் இருந்த கோவில், நேற்று முன்தினம், காலை 6 மணியளவில் திறக்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் மகாவிஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள், கோவிலில் இருந்த பொருட்களை மீட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், சின்னப்பையன் என்பவரை, புதிய பூசாரியாக நியமித்து, கோவிலை சுத்தம் செய்து, மாலை, 4.30 மணியளவில், பொதுமக்களை வரவழைத்து, பூஜை செய்தனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.