பதிவு செய்த நாள்
30
செப்
2015
12:09
திருவண்ணாமலை: ஆரணி அருகே, கண்டுபிடிக்கப்பட்டுள்ள சமணர் படுக்கையை, பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த, எஸ்.யு. வனம், நாசா மலையை சுற்றிப்பார்க்க, சேவூர் கிராமத்தில் வசிக்கும் ஜைனர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் சென்றனர். அப்போது, குகைக்குள் இரண்டு சமணர் படுக்கை மற்றும் துறவிகள் மருத்துவம் பார்த்ததற்கு அடையாளமான குழிகள் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அந்த இளைஞர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பின்னர், பொதுமக்கள் நாசா மலைக்கு சென்று சமணர் படுக்கைகளை பார்வையிட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாசா மலையில், ஆயிரம் அடி உயரத்தில் குகை உள்ளது. குகைக்குள், இரண்டு சமணர் படுக்கை உள்ளன. மூலிகை தழைகள் உரலில் இடித்து மருந்து தயாரித்து வைத்தியம் பார்த்ததற்கான சான்றாக குழி உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், துறவிகள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். மேலும், சமணர்கள் வாழ்வியல் இடம் குறித்து முழுமையான தகவலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதேபோல், ஆரணி அருகே உள்ள திருமலையிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எனவே தொல்பொருள் துறையினர் இந்த பகுதியினை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.