பதிவு செய்த நாள்
30
செப்
2015
03:09
பாரதத்தில் பீஷ்மர் பற்றிய அறிமுகம் அநேகமாகத் தேவை இருக்காது. ஆனால், அவரோடு தொடர்புடைய விசித்திர வீரியன், அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய பாத்திரங்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள். இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், பீஷ்மரின் வரலாற்றையும் நாம் தெரிந்தே ஆக வேண்டும். பீஷ்மரை தேவவிரதன் என்பார்கள். பீஷ்மர் என்ற சொல்லுக்கு சத்தியம் தவறாதவர், மிகுந்த வைராக்யம் உடையர், தனக்கென வாழாதவர் என்ற முப்பெரும் பொருள் உண்டு. சந்தனுவுக்கும், கங்காதேவிக்கும் எட்டாவதாகப் பிறந்த இவர், கங்கையாலேயே வளர்த்து ஆளாக்கப்பட்டார். கங்காதேவி அவரைத்தன் அன்புக்குரிய மகனாக மட்டும் வளர்க்கவில்லை. சகல சாஸ்திரங்களையும் கற்பித்தாள். அஸ்திரவித்தையைப் பயிற்றுவித்தாள். வசிஷ்டர் இவருக்கு வேதங்களைக் கற்பித்தார். சுக்ராச்சாரியாரும் இவருக்கு வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார். சாஸ்திரம், அஸ்திரம் இரண்டிலும் இணையில்லாத பரசுராமர் அவருக்குத் தெரிந்த கலைகளைச் சொல்லிக் கொடுத்தார்.ஒருமுறை, கங்கையின் குறுக்கே தன் அஸ்திரங்களால் தடுப்பணை கட்டினான் தேவவிரதன். இதனால், தளும்ப தளும்ப பாய்ந்து கொண்டிருந்த கங்கை, அந்த தடுப்பணைக்கு அப்பாற்பட்ட பகுதியில் நீர்ப்போக்கு இல்லாமல் வறண்டு போனாள். இந்த அதிசய செய்தி, சந்தனு மகாராஜாவை அடைந்தது.
அவர் தடுப்பணையை உடைப்பதற்காக வந்தார். தேவவிரதன் அவரோடு பதிலுக்கு மல்லுக்கு நின்றான். ஓடும் நதிநீரைத் தேக்கி நிறுத்தாதே! இதை நான் அனுமதிக்கமாட்டேன், என்கிறார் சந்தனு. என் தாயோடு நான் விளையாடுவதை தடுக்க நீங்கள் யார்?, என்று கேட்கிறான் தேவவிரதன். அப்போதே, சந்தனுவிற்கு தேவவிரதன் என்பது யார் என்று விளங்கி விடுகிறது. கங்காதேவியும், இருவரையும் மல்லாட விடவில்லை. நேரில் பிரசன்னமாகி, இருவரையும் இணைத்து வைத்தாள். அந்த நொடியே தேவவிரதனும், தாயின் கட்டளைக்கேற்ப தந்தையின் பின்னே சென்றான். சென்றது மட்டுமல்ல! இப்படியும் ஒரு பிள்ளையா என்று இந்த உலகே வியக்கும்படி பண்போடும், பொறுப்போடும் நடந்து கொண்டான். அதற்கு சாட்சியாகிறது ஒரு சம்பவம். தேவவிரதன் தந்தையை அடைந்து இளவரசனாக முடிசூட்டப்பட்டான். நான்கு வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், சந்தனு மகாராஜாவின் பார்வையில் யமுனையாற்றில் படகோட்டும் சத்தியவதி என்னும் பெண் தென்படுகிறாள். அவளது எழிலும், அவள் மேலிருந்து வீசிய வாசமும் சந்தனுவை மயக்கிற்று. சத்தியவதியை மணக்கும் எண்ணம் தோன்றியது. அவளது வளர்ப்புத்தந்தையான செம்படவ தலைவனிடம் சென்று தன் விருப்பத்தை தெரிவித்தார். அந்த தலைவ னோ, சந்தனு மகாராஜாவுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். அரசே! என் மகளை உங்களுக்குத் தருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.
அவளை நீங்கள் மணக்கும் பட்சத்தில் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளே உங்கள் அரசாட்சிக்கு சொந்தமாக வேண்டும் சம்மதமா? என்று கேட்டான். அந்த நிபந்தனையை சந்தனுவால் ஏற்க முடியவில்லை. தனக்கும் கங்கைக்கும் பிறந்த கங்காதரனாகிய தேவவிரதன் வீராதிவீரனாகவும், சூராதிசூரனாகவும் இருக்க இந்த நிபந்தனையை ஏற்க முடியாமல் வருத்தத்தோடு திரும்பினான். தந்தையின் வருத்தம் தனயனுக்குத் தெரிய வருகிறது. செம்படவ தலைவனிடம் சென்று தந்தைக்காக பெண் கேட்டான். இது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். செம்படவ தலைவனும் தேவவிரதன் செயல்கண்டு ஆச்சரியப்பட்டான். இளவரசே! தந்தையின் மகிழ்ச்சிக்காக தாங்கள் வந்திருப்பது ஆச்சரியம், அதிசயம். அதற்காக, என் மகள் ஒரு அரசனின் ஆசை நாயகியாக இருப்பதை நான் விரும்பவில்லை. என் மகள் வயிற்றுப் பிள்ளைகளே நாடாள வேண்டும். தாங்கள் முதல்பிள்ளையாக இருக்க அது எப்படி சாத்தியம்? என்று கேட்டான். இதைக் கேட்ட தேவவிரதனிடம், ஒரு தீர்க்கமான முடிவு. தலைவனே! உனக்கு நான் சத்தியம் செய்து தருகிறேன். உன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளைகளே நாடாளுவார்கள். நான் ராஜ்ய உரிமை கோர மாட்டேன். போதுமா? என்று கேட்க, செம்படவ தலைவன் சரி என கூறவில்லை.
இளவரசே! தாங்கள் அரசாள விரும்பவில்லை என்று இப்போது கூறலாம். நாளையே உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தால் அந்த பிள்ளைக்கு உரிமை உள்ளதே! அப்போது, என் மகளும் பிள்ளைகளும் ஓரம் கட்டப்படுவார்களே... என்ற நியாயமான கேள்வியைக் கேட்க, தேவவிரதன் இன்னொரு சத்தியமும் செய்தான். தலைவரே! உன் மகள் தான் என் தந்தையின் மனைவி. எனக்கு சிற்றன்னை. என் வாரிசுகள் அவளது குழந்தைகளுக்கு போட்டியாக வரக்கூடும் என்று நீ அச்சப்படுவதால், நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. இது சத்தியம்! இனியேனும் திருமணத்தை தாமதப்படுத்த வேண்டாம்,என்று கூற செம்படவத் தலைவன் ஆடிப்போனான். சந்தனு மகாராஜா, மகனின் சத்தியத்தைக் கேட்டுச் சிலிர்த்துப் போனார். அதன்பின், சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நடந்தது. தேவவிரதனுக்குச் சான்றோர்களால், பீஷ்மர் என்ற பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. தந்தையான சந்தனு, தன் மகனுக்கு அவன் விரும்பும் போது மரணிக்கும் வரத்தை தந்தான். சந்தனு- சத்தியவதி தம்பதிக்கு சித்ராங்கதன், விசித்திர வீரியன் என்ற வாரிசுகள் தோன்றினார்கள். இவர்கள் இளம்பிராயத்தை கடக்கும் முன்பே, சந்தனுவின் காலம் முடிந்து போனது. மூத்தவராகிய பீஷ்மர், சித்ராங்கதனுக்கு முடிசூட்டினார். ஆனால், அவன் குறிப்பிடும்படியாக நாட்டை ஆளவில்லை. அவனுக்கும், அவன் பெயரைக் கொண்ட கந்தர்வன் ஒருவனுக்கும் பகை மூண்டது.
அது போரில் வந்து நின்றது. அந்தப்போரும் மூன்றாண்டுகள் நடந்தது. போரில் பீஷ்மர் களமிறங்கி இருந்தால் சித்ராங்கதனுக்கே வெற்றி கிடைத்திருக்கும். ஆனால், சித்ராங்கதனிடம் நியாயம் இல்லை. கந்தர்வனை வம்பிக்கிழுத்து யுத்தம் செய்திருந்தான். இந்த யுத்தத்தை தவிர்க்க, பீஷ்மர் முயன்று சித்ராங்கதனுக்கு அறிவுரை கூறினார். அதை அவன் கேட்கவில்லை. மாறாக பீஷ்மரிடம்,நடைபெறப்போகும் போரில் எனக்கு உங்கள் உதவி ஒன்றும் தேவையில்லை, என்று கூறிவிட்டான். அதன்பின், போரில் தோற்று உயிரையும் விட்டான். அப்படி இறந்தவனுக்கு, பீஷ்மரே முன்னிலையில் இருந்து, கர்மகாரியங்களைச் செய்து முடித்தார். பின், விசித்திரவீரியனை ராஜாவாக்கியதோடு, ஒரு ராஜகுருவைப் போல அவனருகிலேயே இருந்து வழிநடத்தவும் செய்தார்.இதுவரை தர்மப்படியும், செய்து கொடுத்த சத்தியப்படியும் வாழ்ந்து விட்ட பீஷ்மருக்கு, விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது தான், சோதனையும் ஆரம்பமாயிற்று. விசித்திரவீரியனுக்கு தகுதியான பெண் வேண்டும் என்று தேட முற்பட்டபோது, காசி அரசன் தன் மகள்களான அம்பை, அம்பாலிகை, அம்பிகை என்ற மூன்று பேருக்கும் சுயம்வர ஏற்பாடு செய்திருந்தான்.
திருமண ஏற்பாட்டுக்கு முன்பே, சவுபல தேசத்து அரசனான சால்வன் என்பவன் மீது அம்பை காதல் கொண்டிருந்தாள். சால்வனும் அம்பையை மணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு சுயம்வரத்திற்கு வந்திருந்தான். சுயம்வரத்திற்கு பீஷ்மரும் வந்திருந்தது தான் ஆச்சரியம். தன் தம்பி விசித்திரவீரியனுக்காகவும், தன் நாட்டுக்கு அரச சந்ததி உருவாக வேண்டும் என்பதற்காகவும், பீஷ்மர் சுயம்வர மண்டபத்திற்கு வந்தார். இது கண்டு, காசிராஜன் மட்டுமல்ல- சுயம்வரத்திற்கு வந்திருந்த அத்தனை பேருமே ஆச்சரியப்பட்டார்கள்- அதிர்ச்சிக்கும் ஆளானார்கள். இந்தப் பிறப்பில் எனக்கு திருமணமில்லை என்று சத்தியம் செய்திருக்கும் பீஷ்மர், சுயம்வரத்திற்கு வந்தது ஏன் என்ற கேள்வி அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும்......! காலமும் பீஷ்மரை வைத்து விளையாட காத்திருந்தது. அப்படி அது விளையாடப் போவதை வைத்து நாம் அடுத்தடுத்து அறிந்து கொள்ளப்போகும் பாத்திரங்கள் தான் சால்வன், அம்பை, அம்பாலிகை, அம்பிகை, துருபதன் என்னும் பாத்திரங்கள்.