பன்றி முகத்துடன் வராக மூர்த்தியாக அவதரித்த திருமால், அசுரர்களை அழித்து பூமிதேவியைக் காப்பாற்றினார். அப்போது அவள் அழுதாள். உன்னைக் காப்பாற்றிய பின்னும் ஏன் அழுகிறாய்? என்று வராகர் கேட்டார். அதற்கு தேவி, ஸூகர மூர்த்தியே! (பன்றி முகம் கொண்டவரே) எனக்கு ஒரு கஷ்டம் என்றதும், நான் உங்களின் மனைவி என்பதால், என்னைக் காப்பாற்ற ஓடோடி வந்து விட்டீர்கள். ஆனால், என் பிள்ளைகளான உயிர்கள் பூமியில் எத்தனையோ கோடி பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே! அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்து அவர்கள் அழைத்தால் உடனே வருவீர்களா? என் பிள்ளைகளை நினைத்தேன். அழுகை வந்து விட்டது, என்றாள். ஸூகரம் என்பதற்கு பன்றி எனறும், எளிதில் செய்வது என்றும் இரு பொருள் உண்டு. இதில் வராகர்,எளிதில் செய்வது என்னும் பொருளிலும் பூமி தேவிக்குப் பதிலளித்தார். தேவி! எந்த ஒரு உயிரும் துன்பத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. ஒருவன் நன்றாக வாழும் காலத்திலேயே, என்னைச் சரணடைந்து விட்டால் போதும். உயிர் போகும் வேளையில், வலி தாங்காமல், என்னை நினைக்க முடியாவிட்டாலும் கூட, அவனை நான் நினைப்பேன். அவன் பிறப்பற்ற நிலையை அடைய அருள்புரிவேன், என்றார். இதற்காக பூமிதேவி வராக மூர்த்திக்கு நன்றி தெரிவித்தாள். புரட்டாசி சனியன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று, நம் பிரச்னைகளையெல்லாம் அவரிடம் சொல்லி, அவரே அதை தீர்த்து வைக்கட்டும் என நம்பிக்கையோடு ஒப்படைத்து விட்டு வந்து விடுங்கள். அது தானாக தீர்ந்து போகும்.