பதிவு செய்த நாள்
09
அக்
2015
03:10
தூத்துக்குடிக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பட்டினமருதூர். அங்கு மகாராஜப் புலவர் மதுரவல்லி அம்மையார் தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் அவதரித்தவர் அப்பரானந்த சுவாமிகள். சுவாமிகளின் பிள்ளைத் திருநாமம் ‘ஐயம் பெருமாள் ’ என்பது சுவாமிகளுக்கு மூத்த சகோதரர் அறுவர். சகோதரி ஒருவர். சுவாமிகள்தான் கடைக்குட்டி. ஒருமுறை ஐயம்பெருமாள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சுரண்டைப் பகுதியில் வாழ்ந்த குழந்தை ‘முக்தானந்த தேசிகர் ’ என்னும் மகான் பட்டினம் மருதூர் வந்தார். அங்கு சிறுவனாக இருந்த ஐயம்பெருமாளைக் கண்டார். சிறுவனது இயல்பினை அறிந்த அம்மகான் “உன்னை நீ அறிவாயாக ” என்று உபதேசித்துத் திருநீறு வழங்கினார். முற்பிறவிப் பயனாய் ஐயம்பெருமாள் குரு நாதரைப் பின்பற்றி பல சிவத்தலங்களுக்குச் சென்று பின் மதுரையை அடைந்தார்.
இங்கு பட்டினம் மருதூரில் மகாராசக் கவியும் மதுரவல்லி அம்மையாரும் பல இடங்களில் தேடியும். குழந்தை கிடைக்காததால் வாடினர். குலதெய்வத்தை வேண்டினர். குலதெய்வமான ஐயனார் கனவில் தோன்றி உன்மகன் மதுரையில் உளன் எனக் கூறியது. மகாராசக் கவி மதுரை சென்று மகானுக்குத் தொண்டு செய்யும் தம் மகனைக் கண்டு மகிழ்ந்தார். குருவான முக்தானந்தர் ஐயம்பெருமாளிடம். “முன் வினைப் பயனை அனுபவிக்க இல்லறத்தை நடத்துக ” என்றார். மகாராசப் புலவரிடம் ‘இவன் ஞானி ’ என்று கூறினார். தந்தையும் மகனும் பட்டினம் மருதூர் திரும்பினர். குருநாதர் கூறியதை மகாராசப் புலவர் மனைவியிடம் கூறினர். களங்காட்டிலிருந்த மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையாரை சுவாமிகளுக்கு மணமுடித்தனர்.
என்ன காரணத்தினாலோ சுவாமிகள் யார் கண்ணிலும் புலப்படாமல் மறைந்தார். ஊரலர் பேசிய இழிசொல் கேட்டுப் பெற்றோர் வருந்தினர். தமக்கை முத்தம்மையார் வேண்டியதற்கிணங்க சுவாமிகள் மீண்டும் தோன்றினார். மனைவி இருளகற்றி அம்மை யாருடன் பட்டினம் மருதூர் வந்தார். சில நாட்கள் கழிந்தன. இடைப்பட்ட தவத்தைத் தொடர விழைந்த சுவாமிகள் தன் மீது மிகுந்த பாசங்கொண்ட தமக்கை முத்தமை வசிக்கும் நெட்டூர் வந்தார். தற்பொழுது சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கு வெளியே நிருதி மூலையில் நிஷ்டையடி என வழங்கும் இடத்தில் இரண்டரை ஆண்டுகள் நிஷ்டையில் ஆழ்ந்தார், தொடக்க நாள்களில் சுவாமிகளின் முகத்தில் வெயில் படாதவாறு தமக்கை முத்தம்மையாரும் மனைவி இருளகற்றியும் தம் சேலை முன்றானையால் மறைத்து வந்தனர். மெல்ல வளர்ந்து வந்து புற்று சுவாமிகளின் திருமேனி முழுவதையும் மறைந்தது.
பெண்டிர் இருவரும் கணபதியிடம் முறையிட்டு வேண்டினர். அவரும் தம் துதிக்கையால் புற்றுடன் பெயர்த்து சித்ரா நதியிலிட்டார். புற்றுக் கரைந்தது. ஊர்த்தெய்வம் முப்பிடாதி அம்மையின் கூற்றுப்படி வீட்டிலுள்ளோர் அழகிய ஆடைகளைக் கொடுத்தனுப்பினார். தவமுடித்துத் தன் தாயைக் காண பட்டினமருதூர் சென்று வந்தபின் சுவாமிகள் இல்லற வாழ்வை மேற்கொண்டார். சுவாமிகளுக்கு இரு பெண் மக்கள் பிறந்தனர். மூத்தவளுக்குத் தன் தாயின் பெயரையே மதுரவல்லி எனப் பெயரிட்டனர். இளைய மகளுக்கு “எனைக் காத்த அம்மை” எனப் பெயரிட்டார். உரிய பருவம் வந்ததும் மூத்த மகளுக்குக்களக்காட்டில் திருமணம் நடத்தினார். இளைய மகளைத் தன் தமக்கையிடம் ஒப்படைத்து உன் மகனுக்குத் திருமணம் செய்வாயாக.... எனக் கூறினார்.
சுவாமிகளின் குருநாதர் குழந்தை முக்தானந்த சுவாமிகள் அப்பொழுது மன்னார் கோயிலில் வாழ்ந்து வந்தார். தம் குருநாதர் பரிபூரணம் அடையும் காலம் நெருங்குவதை உணர்ந்த சுவாமிகள் மன்னர் கோயில் சென்று குருவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சீடனைக் கண்ட குரு மிகவும் மகிழ்ந்து நெற்றியில் திருநீறிட்டு, “நீ என்னினும் பெருமை பெற்றாய். உன்னை உலகம் அப்பரானந்தம் என்று கூறும். நீ மிகுந்த சித்தியடைந்திருக்கின்றாய். நான் வீடு பேறடையும் சமயத்தில் என் எண்ண மறிந்து நீ வந்தமையால் மகிழ்கிறேன்” என்று கூறி ஆசிர்வதித்தார். குருநாதர் மறைந்தவுடன் அவரது திருமேனி அடக்கம் செய்து 10 நாள் பூசைகளையும் சுவாமிகள் நிறைவேற்றினார்.
நெட்டூரில் ஆற்றி வந்த அறப்பணிகள் அன்னதானம் ஆகியவற்றை இருளகற்றி அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டு சுவாமிகள் “ஒக்க நின்றான் பொற்றை ” எனும் குன்றைச் சார்ந்து ஒரு குகையில் யோக நிட்டை பயின்றார். அப்பொழுது ஒருநாள் அப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த சொக்கம்பட்டிக் குறுநில மன்னனாகிய வெள்ளைப் பாண்டியன் சுவாமிகளைக் கண்டு பணிந்து. வணங்கி தம் அரண்மனைக்கு எழுந்தருள வேண்டினார். சுவாமிகளும் ஏழு நாட்களில் வருவதாகக் கூறி நெட்டூர் சென்று விட்டு அரண்மனை சென்றார். வெள்ளைப் பாண்டியன் பணிவிடைகள் செய்து மகானைப் போற்றினான். ஒருநாள் சுவாமிகள் சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்த பொழுது, எட்டயபுரம் அரசவைப் புலவனான கடிகை முத்துப் புலவரும் அங்கு வந்திருந்தார். மன்னன் முனிவருக்குச் செய்யும் சிறப்பினைக் கண்டு எள்ளி நகைத்தான். சுவாமிகள் சென்றபின் மன்னனிடம் சுவாமிகளை இழித்துக் கூறினான்.
மன்னனோ “ஞானிகளை அவ்வாறு கூறுவது தவறு ” எனக் கூறினான். ஊர் திரும்பும்போது புலவனின் கன்னம் வீங்கி, பின் புற்றாக மாறியது. துயரமடைந்த புலவன் சங்கரன் கோயில் வந்து தவங்கிடந்தான். கோமதி அம்மையார் திருச்செந்தூர் முருகன் கனவில் தோன்றி, “என் அன்பனாகிய அப்பரானந்தரை இகழ்ந்ததால் உனக்கு இந்நிலை வந்தது. அவன் கையினால் உணவு உண்ண இந்நோய் தீரும் ” எனப் பகர்ந்தார். கடிகை முத்துப் புலவனும் சுவாமிகளின் பாதம் பணிந்து அவ்வாறே செய்ய நோய் நீங்கியது. அப்பொழுது அவன் மகிழ்ந்து பாடியதே... “அப்பரானந்த ஆனந்தமாலை ” எனும் நூல், புலவன் சொக்கம்பட்டி மன்னனிடம் நடந்ததைக் கூறி ஞானியைப் புகழ்ந்து கூறினான். இவ்வாறு அற்புத சித்துக்களுடன் அருளாட்சி நிகழ்த்தி வந்த சுவாமிகள், தான் முக்தியடையும் காலத்தை மன்னன் வெள்ளப் பாண்டியனுக்கும் மற்றவர்க்கும் சொல்லியனுப்பினார்.
சுவாமிகள் தாம் சொல்லியபடியே ஆனி மாதம் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தில் பரிபூரண மெய்தினார். சமாதி கோயில் அமைந்துள்ள இடம்: தென்காசி திருநெல்வேலி பேருந்து வழித்தடத்தில் உள்ளது ஆலங்குளம். ஆலங்குளத்திற்கு வடக்கே செல்லும் சாலையில் ஏறத்தாழ 8 கி.மீ. தொலைவில் சித்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது சமாதிக் கோயில். நெட்டூர் கிராமம். அவ்வூரின் நடுவே அமைந்துள்ளது சமாதிக் கோயில். கருவறையில் முருகன் பிரதிஷ்டை ஆகியுள்ளார். அர்த்த மண்டபத்தில் சுவாமிக்கு முன் இடப்பாகத்தில் சித்தரின் சமாதி. சமாதியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.