உத்தமபாளையம் : மகாளய அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்கள், மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசைகளில் ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை தினங்களில், புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆன்மாவை திருப்திப்படுத்தும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மகாளய அமாவாசை தினமான நேற்று அதிகாலை முதல் சுருளி அருவியில் புனீத நீராட மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் சுருளியாற்றில் குளித்து விட்டு மறைந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்தனர். பின், இங்குள்ள ஆதிஅண்ணாமலையார் கோயில், பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். சிவனடியார்களுக்கு பலர் வஸ்திர தானம், அன்னதானம் வழங்கினர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர், கம்பம் கம்பராயப் பெருமாள் ஆகிய கோயில்களிலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.