பதிவு செய்த நாள்
14
அக்
2015
12:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சிறிய நலிவடைந்த கோவில்களுக்கு, பூஜைக்கான உபகரணங்கள் 13.10.15-ல் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொத்தம் 1,389 கோவில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், கிராமப்புறங்களில் நலிவடைந்த சிறு கோவில்களுக்கு பூஜைக்கான தட்டு, மணி, கற்பூர ஆரத்தி தட்டு மற்றும் விளக்கு போன்றவை இல்லாமல், முறையாக பூஜை செய்ய முடியாத நிலை இருந்தது.
இதற்காக, கடந்த ஆண்டு, மாநிலத்தில் உள்ள சிறு கோவில்களுக்கு, பூஜைக்கான உபகரணங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அத்திட்டத்தை, கடந்த செப்.15ல் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, நேற்று, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடந்த விழாவில், கிராம கோவில் பூஜாரிகளுக்கு, பூஜை உபகரணங்களை, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சின்னய்யா வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்கள் எண்ணிக்கை: காஞ்சிபுரம் 60, ஸ்ரீபெரும்புதுார் 56, உத்திரமேரூர் 60, மதுராந்தகம் (1) 60, மதுராந்தகம் (2) 50, செங்கல்பட்டு 85 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கான பூஜை உபகரணங்கள் அந்தந்த பகுதிகளில் வழங்கப்பட்டன.