பதிவு செய்த நாள்
14
அக்
2015
01:10
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் 300 ஆண்டுகளாக மூலிகை ஓவியங்கள் புதுப்பொலிவுடன் காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன. இவற்றை பார்வையிட பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் வருகின்றனர்.ராமநாதபுரத்தை ஆட்சி செய்த விஜயரகுநாத சேதுபதி கலை, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் கடந்த 1711 ம் ஆண்டில் அரண்மனையின் தர்பார் ஹாலை கோயில் வடிவில் கட்டினார். அவை கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என, அமைக்கப்பட்டது.
அந்த தர்பார் ஹாலில் தரையை தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் ஓவியம் வரையப்பட்டன. இந்த ஓவியங்கள் தலைச்சிறந்த ஓவியர்களால் மூலிகைகள் மூலம் வரையப்பட்டுள்ளன. விஜயரகுநாத சேதுபதி குழந்தை பருவமே சந்தோஷமான காலம் என, கருதினார். இதனால் கருவறையில் ராமாயணத்தின் பாலகாண்டம் தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் ராமனின் குழந்தை பருவ நடவடிக்கைகள் தத்துரூபமாக உள்ளன. அர்த்த மண்டபத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணரின் குழந்தை பருவம் வரையப்பட்டுள்ளன. மகா மண்டப வடபகுதியில் விஷ்ணு அவதாரங்கள் உள்ளன.
தெற்கு பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியுடன் சேதுபதி மன்னரின் வணிக ஒப்பந்த காட்சிகள், அரசவை நிகழ்வுகள், மராட்டிய மன்னர்களுடனான போர் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இவை 300 ஆண்டுகளை எட்டிய நிலையில் இன்றும் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. இவை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவற்றை தொல்லியல்துறை அகழ் வைப்பகமாக மாற்றி பாதுகாத்து வருகிறது. இவற்றை பார்வையிட பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் வருகின்றனர்.
காப்பாட்சியர் சக்திவேல் கூறுகையில், “தர்பார் ஹாலை ராமலிங்க விலாசம் என, அழைக்கின்றனர். இங்கு ஓவியங்களுடன் மன்னர்களின் போர் கருவிகள், தொல்பொருட்கள் வைத்துள்ளோம். இந்த ஓவியங்கள் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது,” என்றார்.