பதிவு செய்த நாள்
14
அக்
2015
01:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக, பஞ்சபூத தத்துவங்களை விளக்கும் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலை கலை மூவர் குழுவை சேர்ந்த பேராசிரியர் அமர்நாத், சகோதரர் கலை இயக்குனர் சுரேந்தர்நாத், சகோதரி அபர்ணா, நாட்டிய கலைஞர் சுகதன் ஆகியோர் இணைந்து, பஞ்சபூத தத்துவங்களை விளக்கும் வகையில், மீனாட்சி அம்மன் கோயிலில் கொலு கண்காட்சியை அமைத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொலு மண்டபத்தில் ஐந்தாவது முறையாக கொலு கண்காட்சியை அமைத்துள்ளோம். இப்பணியில் ஒன்றரை மாதமாக ஈடுபட்டோம். இக்கொலு, பஞ்சபூத (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) மகிமையை விளக்கும். பெரும்பாலான பொம்மைகளை காட்சிக்கு ஏற்ப ஆர்டர் கொடுத்து வாங்கினோம்.
நிலம் - காஞ்சிபுரம். நீர் - திருவானைக்காவல். காற்று - காளஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை, ஆகாயம் - சிதம்பரம் எனும் தத்துவங்களை உள்ளடக்கியவர் தான் நடராஜர். இந்த ஐந்து ஸ்தலங்கள், நடராஜர், ஓமகுண்டத்தில் (நெருப்பு) பிறந்தவர் உமையாள் (மீனாட்சி). இவையாவும் இடம் பெறும் வகையில், அலங்கரிக்கப்பட்ட 16 அறைகளில், மின்னொளியில் கொலு பொம்மைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன என்றனர்.
கோயில் நடை திறந்திருக்கும் போது கொலு கண்காட்சியை காணலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.