பதிவு செய்த நாள்
27
ஜூலை
2011
12:07
கும்பகோணம்: திருநரையூரில் புதிய ஆன்மீகப்பேரவை துவங்கி, மாதம் ஓர் கோவிலில் உழவாரப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் திருநரையூர் பகுதிகளை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் ஒருங்கிணைந்து ஆன்மீகப்பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். அமைப்புக்கு சிவசுப்ரமணியன் தலைவராகவும்,. கணேசன் செயலாளராகவும், ஒருங்கிணைப்பு செயலாளராக ராஜ்மோகனும், பொருளாளராக சுந்தரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆன்மீகப்பேரவை அமைப்பின் கவுரவ ஆலோசகர்களாக சுந்தரமூர்த்திகுருக்கள், சுப்ரமணியகுருக்கள், நடராஜன், சிட்டிபாபு, செல்வராஜ், மாத்தூர்கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆன்மீகப்பேரவை அமைப்பு தொடங்கப்பட்டபின் முதற்கட்டமாக அழகாபுத்தூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், தொடர்ந்து துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்களில் உழவாரப்பணி மேற்கொண்டனர். உழவாரப்பணி செய்யும் ஆலயங்களில் சுவாமி, அம்பாளுக்கு அன்று சிறப்பு அபிஷேகம் செய்வதும், பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் என முடிவு செய்து செயல்பட்டு வருகின்றனர். வரும் மாதத்தில் கருவிளச்சேரி ஆலயத்தில் உழவாரப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள ஆன்மீக பேரவை திட்டமிட்டுள்ளது.