பதிவு செய்த நாள்
05
நவ
2015
11:11
ஆத்துார்: ஆத்துார் அருகே, மெத்தை வீடு கட்டி வசித்தால், தெய்வ குற்றமாகி விடும் என்று, தமிழகத்தில், ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பல ஆண்டுகளாக கூரை, ஓடு வீடுகளில் வசித்து வருகின்றனர். கான்கிரீட் வீடு கட்ட அரசு வழங்கும் நிதியை வாங்க மறுக்கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, மல்லியக்கரை பஞ்சாயத்தில் உள்ள கருத்தராஜாபாளையமே அந்த கிராமம். இங்கு, பெரியசாமி, கருப்பையா சுவாமி கோவில் உள்ளது. இரவு நேரத்தில், பெரியசாமி வேட்டைக்கு சென்று, ஊரை காவல் காப்பதாக, கிராம மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. அதனால், கான்கிரீட் வீடோ, மாடி வீடோ கட்டினால், தெய்வ குற்றம் ஆகிவிடும் என்று நம்புகின்றனர். வீடுகளில் படி வைத்து கட்டக் கூடாது; மாடியில் நின்று சுவாமியை பார்க்க கூடாது என்ற நியதியை வகுத்து, இன்றளவும், ஒரு கான்கிரீட் வீடு கூட கட்டாமல் உள்ளனர்.கடந்த, 2010ல், தமிழக அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்துக்காக, அரசு அதிகாரிகள், இக்கிராமத்தில் இருந்த, 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை, கணக்கெடுப்பில் சேர்க்க முற்பட்டனர். கான்கிரீட் வீடு கட்ட அரசு வழங்கிய நிதியை, ஏற்க மறுத்து, எங்களுக்கு குடிசைகளே போதும்; கான்கிரீட் வீடுகள் வேண்டாம் என, அதிகாரிகளை மக்கள் திருப்பி அனுப்பினர்.
இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியதாவது:கருத்தராஜாபாளையத்தில், 1996ல், 32 பேர் அரசின் தொகுப்பு வீடு கட்டினர். தெய்வ குற்றம் ஏற்பட்டதாகக் கூறி, ஆறு பேர், கான்கிரீட் மேல்தளத்தை அகற்றி, ஓடு வேய்ந்து கொண்டனர். மற்றவர்கள், மேல்தளத்தின் மீதே ஓடுகளை பதித்தனர். கடந்த, 2010ல், 26 வீடுகள் கட்ட உத்தரவு வழங்கியும், யாரும் வீடு கட்டாததால், அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால், இன்றைக்கும், கான்கிரீட் தொகுப்பு வீடு இல்லாத கிராமமாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கருத்தராஜாபாளையம் கிராம மக்கள் கூறியதாவது:இரவில் பெரியசாமி வேட்டைக்கு செல்வதால், கோவிலில் மின் விளக்கு போடுவதில்லை. வீடுகளில் தொட்டில் கட்டாமல், தரையிலேயே குழந்தைகளை துாங்க வைப்போம். கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் விருந்தில், தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். உறவினர்கள், இங்கு வந்தாலும், இரவில் தங்கக் கூடாது. இவற்றை நம்பாமல், கான்கிரீட் மெத்தை வீடு கட்டியவர்கள் முன்னுக்கு வரவில்லை. தொகுப்பு வீடு கட்டியவர்கள், மேல்தளத்தை அகற்றி விட்டு, ஓட்டு வீடாக மாற்றினர். கூரை, ஓடு வீடுகளில் இருந்தால் மட்டுமே உயிர் வாழ்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.