பதிவு செய்த நாள்
28
ஜூலை
2011
12:07
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை முருகன் கோவிலில் நகை, சிலைகளை பாதுகாக்க, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது. கோபியில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் சஷ்டி, அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி போன்ற தினங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். கோவிலில் தங்கத் தேர் அமைந்துள்ளது. கோவிலுக்கு கோபி பகுதி மக்கள் மட்டுமின்றி ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி வழிபாடு செய்ய வருகின்றனர்.ஸ்வாமி நகைகள் மற்றும் ஸ்வாமி சிலைகளை பாதுகாக்கும் வகையில் கோவிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு சிறிய கட்டிடம் மற்றும் 10 அறை கொண்ட பெட்டகம், அபாய ஒலி எழுப்பும் கருவி, கேமரா போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் கட்டிடம், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெட்டக அறை, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கேமரா, அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.