மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச் சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டிய போது ஐப்பசி மாதம் 30 நாட்களும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச் சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி மாதம் புனிதநீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.அதனால் காசிக்குஇணையான தல மாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகிய சுவாமிகளும் காவிரியின் இருகரைகளிலும் எழு ந்தருளி காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெறும். இதில் முக்கிய நிகழ்வாக ஐப்பசி பிறப்பு முதல் நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி, ஐப்பசி மாதம் 30ம் தேதி கடைமுக தீர்த்தவாரி மிகவும் முக்கியமான விழாவாகும். கடைமுக தீர்த்த வாரியி ல் உலகின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட் டத்தில் நீராடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த துலா உற்சவம் இந்த ஆண்டு கடந்த 18ம் தேதி (ஐப்பசி 1ம் தேதி)தொடங்கியது. வரும் 16ம் தேதி (ஐப்பசி 30ம் தேதி)மதியம் 1.30மணிக்கு சுவாமிகள் அனைவரும் அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருள கடைமுக தீ ர்த்தவாரி நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.