பதிவு செய்த நாள்
12
நவ
2015
10:11
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டாருக்கு குருபூஜை விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூரில் சிவஞானபோதத்தை உலகுக்கு அருளிய மெய்கண்டாரின் முக்தி தலம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று குருபூஜை விழா நடக்கிறது. நேற்று (11ம் தேதி) காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. காலை 10:00 மணிக்கு திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சியும், 10:30 மணிக்கு "சிவசத்து என்னும் தலைப் பில் பேராசிரியர் சுப்ரமணியன் சைவ சித்தாந்த சொற்பொழிவும் நிகழ்த்தினார். தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு, குருமரபு வாழ்த்தும், 12:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. அப்போது மெய்கண்டார் ஸ்வர்ண கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு மகேசுவர பூஜையும், மாலை 6:00 மணிக்கு மெய்கண்டார் மூலவர் வழிபாடும், இரவு 7:00 மணிக்கு திருவீதியுலாவும் நடந்தது. இதில் சேலம், வாழப்பாடி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெய்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு சைவ சித்தாந்த பயிற்சி மையங்களை சேர்ந்த மாணவர்கள், அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதின நிர்வாகிகள் மற்றும் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் செய்திருந்தனர். இதேப்போல் மெய்கண்டார் அவதரித்த கடலூர் மாவட்டம், பெண்ணாடத்திலுள்ள கோவிலில் குருபூஜை விழா நடந்தது.