பதிவு செய்த நாள்
29
ஜூலை
2011
11:07
ராமேஸ்வரம் : ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீர்த்தமாட வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆடிஅமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம்செய்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்கு அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கம். நாளை (ஜூலை 30) அமாவாசைக்கு வழக்கம் போல் ராமேஸ்வரத்திற்கு தீர்த்தமாட வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும், தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்யவும் தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. நெருக்கடி இல்லாமல் வரிசையில் நின்று தீர்த்தமாடுவதற்கு வசதியாக தெற்கு மற்றும் கிழக்கு ரதவீதியிலும், தள்ளு முள்ளு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக முதல் பிரகாரத்திலும் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால், இந்தாண்டு அமாவாசைக்கு மதுரை,சிவகங்கை இணை கமிஷனர்கள், விருதுநகர், பரமக்குடி உதவி கமிஷனர்கள் மற்றும் 10 ஊழியர்களை ராமேஸ்வரம் கோயில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று இரவு முதல் கோயிலை சுற்றி நான்குரத வீதியிலும், நடுத்தெரு, சன்னதிதெரு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது: கோயிலுக்குள் தீர்த்தமாட புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களும், பிரச்சனைகளும் தவிர்க்கப்படும். கோடி தீர்த்தம் பகுதியில் கேட் திறக்கப்பட்டதால் பக்தர்கள் இலகுவாக தீர்த்தமாடி திரும்புகின்றனர். தீர்த்தமாடி சுவாமிதரிசனம் செய்வதில் ஏற்படும் பிரச்சனை குறித்து புகார் செய்வதற்கு புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டள்ளது, என்றார். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளதால் வெளியூர் பக்தர்கள் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்களும், வர்த்தகர்களும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என ராமேஸ்வரம் தாசில்தார் கணேசன் தெரிவித்தார்.