பதிவு செய்த நாள்
19
நவ
2015
12:11
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே ஜடாயு தீர்த்த சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.ராமாயண வரலாற்றில், சிவ பக்தரான ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தனுஷ்கோடி வந்த ஸ்ரீ ராமருக்கு, பாவம் பிடித்து சோர்வு ஏற்படுகிறது. இதனை போக்க, சிவபெருமான் தலையில் இருந்து வரும் நீரில் உருவான ஜடாயு தீர்த்தத்தில், ராமர் புனித நீராடியதும் பாவங்கள் நீங்கி புது பொலிவு பெற்றதாக கூறப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஜடாயு தீர்த்த சிவன் கோயில், ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலில், 2016ம் ஆண்டில் மகாமகம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு கும்பாபி ஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்து, ரூ. 4 லட்சத்தில் திருப்பணிகள் செய்து முடித்தது. இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், சுவாமி பிரணவநந்தா உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.