கீழக்கரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர்.திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.வழக்கத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நெரிசலில் தவித்தனர்.இரண்டு கி.மீ.,தூரத்திற்கு முன்னதாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் முதியவர்கள் நடந்து செல்ல அவதியடைந்தனர். புனித நீராடிய பின் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் 48வது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். கோயில் மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட பாயாசத்தை பக்தர்கள் பய பக்தியுடன் வாங்கி குடித்து சுவாமியை தரிசனம் செய்தனர்.