பதிவு செய்த நாள்
24
நவ
2015
11:11
காரைக்குடி:காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மூலஸ்தான கோபுர பணி தொடங்குவதை முன்னிட்டு, நேற்று பாலாலயம் நடந்தது.காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி 2013 ஆகஸ்டில் ஸ்ரீ லலிதாமுத்து மாரியம்மன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. 10 ஆயிரத்து 500 சதுர அடியில் சுற்றுபிரகார மண்டபம், தங்க தகடு பதிக்கப்பட்ட கொடிமரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அன்னதான மண்டபம், 5 நிலை கொண்ட, 56 அடி உயரமுள்ள ராஜகோபுரம் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. மூலஸ்தான கோபுரத்தை உயர்த்துவதற்கான பணிக்குரிய, பாலாலய நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
மாலை 6.15 மணிக்கு முதற்கால யாக பூஜை, நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, கலசாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் ரவிசாமி குருக்கள், சோமன் குருக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை தலைவர் அருணாசலம், நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யப்பன், ராமசுப்பிரமணியன், விஸ்வநாதன், கருப்பையா, ரத்தினம், கலை செல்வம், பெரியகருப்பன், நாச்சியப்பன், சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா,நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் பாலாஜி, கணக்கர் அழகுபாண்டி உள்ளிட்டோர் செய்திருந்தனர். மூலஸ்தான கோபுர பணி மூன்று மாதத்துக்குள் நிறைவு பெற்று கும்பாபிஷேக பணி நடைபெறும், என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.