அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2011 11:08
கும்பகோணம்: அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில் ஆடி அமாவாசை நிகும்பலா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை அடுத்து அய்யாவாடியில் மகாபிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. இந்திரன் தனது சாபம் நீங்க இங்கு நிகும்பலா யாகம் செய்து வழிபட்டுள்ள சிறப்பு பெற்ற தலம்.இத்தலத்தில் நடைபெறும் யாகத்தில் பங்குபெறுவதால் வழக்குகளில் வெற்றி, செய்வினைக்கோளாறுகள் அகலுதல், பிரார்த்தனை நிறைவேறுதல் போன்ற நற்பலன்கள் நடைபெறுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நிகும்பலா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆடி அமாவாசை என்பதால் நள்ளிரவு முதல் பக்தர்கள் அய்யாவாடிக்கு வருகை தர ஆரம்பித்தனர். நேற்று பிரத்தியங்கிராதேவி சிறப்பு புஷ்பலங்காரத்தில் காட்சியளித்தார். காலை 10 மணிக்கு பரம்பரை அறங்காவலர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில், சங்கர் சிவாச்சாரியார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்ற நிகும்பலா யாகம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஆடி அமாவாசை என்பதால் வழக்கமான அமாவாசை நாட்களை விட இரண்டு மடங்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வருகை தந்திருந்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் காலை முதல் இயக்கப்பட்டது.நேற்று காலை அய்யாவாடியில் நான்கு வீதிகள் முழுவதும் பக்தர்களின் நீண்ட வரிசையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.