பதிவு செய்த நாள்
04
டிச
2015
11:12
உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மணலிங்கேஸ்வரர் கோவில், சன்னதிகள் நீரில் மூழ்கின. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினர். உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது, திருமூர்த்திமலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டி, 900 மீ., உயரத்தில், வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள, காட்டாறுகளில் இருந்து நீர்வரத்துள்ளது.
இருநாட்களாக, மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்யத் துவங்கியதையடுத்து, பொதுமக்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், அதிகாலை வரை, மலைப்பகுதியில் மழை தீவிரமடைந்தது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் இருந்து, திருமூர்த்தி அணைக்கு, அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டிச் செல்லும் பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வினாடிக்கு, 1,285 கனஅடி வீதம் பாலாற்றில் நீர்வந்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை நீர் சூழ்ந்தது. கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி, எட்டு கால் மண்டபம் மற்றும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும், எழுந்தருளியுள்ள சன்னதி முழுவதும் நீரில் மூழ்கியது. கோவிலை ஒட்டி அருவிக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற நீர், பாலத்தில் வைக்கப்பட்டிருந்த, அபாய எச்சரிக்கை பலகைகளையும் அடித்துச் சென்றது.
தகவலறிந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், கோவில் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளில், நேற்று நள்ளிரவு முதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், பாதுகாப்பு கருதி, கோவில் வளாகத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை; மலைப்பகுதியில் பெய்து வரும் மழை நிற்கும் வரை, அருவிக்கு செல்ல தடை தொடரும், என்றார்.