ஐயப்பா சேவா சங்கத்துடன் இணைந்து தமிழக கல்லூரி மாணவர்கள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2015 11:12
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஐயப்பா சேவா சங்கத்துடன் இணைந்து தமிழக கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டர்களாக சேவை செய்து வருகின்றனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஐப்பா சேவா சங்கம் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தன்னலமற்ற சேவைகளை செய்து வருகிறது. சபரிமலை சன்னிதானத்திலிருந்து மாளிகைப்புறம் செல்லும் பிளைஓவர் பாதையின் கீழ் பகுதியில் ஐயப்பா சேவா சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நடை திறந்திருக்கும் எந்த நேரத்தில் சென்றாலும் இங்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும்.
காலையில் உப்புமா, பொங்கல், கஞ்சி போன்றவை கிடைக்கும். மதியம் சாப்பாடு போடப்படுகிறது. இரவு கஞ்சி கிடைக்கும். பக்தர்கள் வயிறார இங்கு சாப்பிட முடியும். பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் அரிசி, காய்கறி போன்றவற்றை பயன்படுத்தி இந்த சேவை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, திண்டுக்கல் போன்ற இடங்களில் இருந்து பெரும்பாலான காய்கறி வருகிறது. சேவாசங்கம் பயன்படுத்தியது போக எஞ்சியுள்ள காய்கறிகள் தேவசம்போர்டு அன்னதானத்துக்கு வழங்கப்படுகிறது. சமையலறையில் என்ன பொருட்கள் எல்லாம் வருகிறதோ அவை எல்லாம் சமையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்று ஷிப்டுகளாக 40 சமையல் கலைஞர்கள் இடைவிடாது சமையல் பணியில் ஈடுபடுகின்றனர். சன்னிதானம் மட்டுமல்லாமல் பம்பை, நிலக்கல் மற்றும் பக்தர்கள் வரும் பாதைகளில் சேவாசங்கத்தின் அன்னதானம் நடைபெறுகிறது.
இதுபோல பக்தர்களின் தாகம் தீர்க்க மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீர் 24 மணி நேரமும் விநியோகம் செய்கின்றனர். சபரிமலை வரும் லட்சக்கணக்கான வாகனங்களின் பழுது நீக்கும் பணியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இவர்கள் செய்யும் மற்றொரு முக்கிய சேவை உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டிரெச்சர் மூலம் ஆஸ்பத்திரிக்கும், பம்பைக்கும் கொண்டு செல்வதாகும். இதில் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டர்களாக ஈடுபட்டுள்ளனர். சேவையில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஐந்து கிரேஸ் மார்க் வழங்கப்படுகிறது. சன்னிதானத்தில் யாராவது இறந்தால் அவர்கள் உடலை பம்பைக்கு கொண்டு சென்று சேர்க்கும் சேவையை சேவாசங்கம் செய்கிறது.