பதிவு செய்த நாள்
02
ஆக
2011
05:08
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது அவருக்கு ஞானகுருவாக விளங்கியவர் குள்ளச்சாமி. வண்ணான் தொழில் என்ற தலைப்பில் பாரதியார் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு நூறு வயதாகிவிட்டது என்றும் பார்ப்பதற்கு நாற்பது வயதானவராகவே காணப்படுகிறார் என்றும் மக்கள் கூறுவர். கறுப்பு நிறமும் உருண்டை முகமும் கொண்ட அவர், நாலரை அடி உயரமே உள்ளவராக இருந்தார். வயிரம் ஏறிய உடல். திக்தித் திக்கி தொடர்பின்றிப் பேசுவார்; தெருவிலே படுத்திருப்பார்; மண்ணிலே புரள்வார்; நாய்களுடன் சண்டை செய்வார்; கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; பசித்தபோது சில வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுத்து உண்பார். பெண்களுக்கு அவர் மேல் இரக்கம் உண்டு. திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகளின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு ஓடி விடுவார். யாராவது அவரைத் திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகலுவார். அவரிடமிருந்து திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டால் நோய் அணுகாது என்பது பலருடைய நம்பிக்கை. ஒரு நாள் குள்ளச்சாமியார் கிழிந்த அழுக்குத்துணிகளை மூட்டையாகக் கட்டி, அதை முதுகின்மேல் சுமந்துகொண்டு வந்தார். பாரதியார் அதைக் கண்டவுடன் வழக்கம்போல் வணங்கினார். ஆனால் சாமியார் குறும்புச் சிரிப்பு சிரித்தார். பாரதியார், சாமி, கந்தைகளைக் கட்டி முதுகின்மேல் வைத்து சுமப்பதேன்? என்று வினவினார். சாமியார், நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய். நான் முதுகின் மேலே சுமக்கிறேன் என்று விடையளித்துவிட்டு, விரைவில் மறைந்தார்.
குள்ளச்சாமியார் கூறியதன் பொருளை பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்:
அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங்கவலைகளையும், பழந்துன்பங்களையும், பழம் சிறுமைகளையும் மனதில் வைத்து வீணாய்ச் சுமந்து திரியும் மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டே குள்ளச்சாமி இவ்வாறு கூறினார். ஒருநாள் பாரதியார் குள்ளச் சாமியாரைப் பார்த்து விளையாட்டாக, சாமி. இப்படி பிச்சை வாங்கி உண்ணுகிறீர்கள். ஏதேனும் தொழில் செய்து பிழைக்கலாகாதா? என்றார். சாமியார், தம்பி, நான் வண்ணான் தொழில் செய்கிறேன். ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்ப்பதும் அந்தக்கரணம் ஆன துணி மூட்டைகளை வெளுப்பதும் என் தொழில்கள் என்றார். பாரதியார், சாமியாரே, ஞானநெறியில் செல்வோன் எத்தொழிலை முதலில் செய்யவேண்டும்? என்று கேட்டார். சாமியார், முதலில் நாக்கை வெளுக்கவேண்டும். பொய், குறளை, கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி ஆகியவை கூடாது. உண்மையே பேசவேண்டும். அச்சத்தை நீக்குவதே அந்தக்கரணத்தை வெளுத்தலாகும் என்றார். சும்மா என்ற கட்டுரையில் பாரதியார் குள்ளச்சாமியைப் பற்றி எழுதுவதாவது : இவர் கலியுக ஜடா பரதர். மகாஞானி. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர். பெண்கள் இவரைத் தெருவில் கண்டவுடன் வணங்குவார்கள். குழந்தைகள் இவரைக் கண்டால் விருப்பத்துடன் ஓடி வருவார்கள்.
பாரதி அறுபத்தாறு எனும் பகுதியில் பாரதியார் பாடியிருப்பதன் கருத்து :
குள்ளச்சாமி புகழ் : குருவின் திருவருளால் பிறப்பு மாறி அமர நிலை அடைந்துவிட்டேன். பராசக்தியின் திறம், சித்தின் இயல்பு, வானத்தைத் தீண்டும் வகை ஆகியவற்றை அவர் உணர்த்திக் காத்தார். அமைதி நிலை அளித்து குப்பாய ஞானத்தால் சாவு எனும் அச்சத்தைப் போக்கினார். தெளிந்த ஞானியான இக்குள்ளச்சாமி பாசத்தையும் அச்சத்தையும் நீக்கியவர்; அவர் பெருமை எவ்வளவு எழுதினும் அடங்காது. காயகற்பம் சாப்பிட்டவராகையால், அவருடைய வயதைக் கணக்கிட்டுச் சொல்ல யாராலும் இயலாது. 1930ஆம் ஆண்டில், பாரதி பாடல்களுக்குத் தகுந்த ஓவியங்கள் மித்திரனில் தொடர்ச்சியாக வெளிவந்தன. கே.ஆர். சர்மா என்ற ஓவியர் வரைந்த படமொன்றில், பாரதியார் தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, தரையில் அமர்ந்து, தம் முன்னுள்ள மேசைப் பெட்டிமேல் உள்ள ஏட்டினில் எழுதிக் கொண்டிருப்பதையும், அருகில் குள்ளச்சாமி நின்று கொண்டிருப்பதையும் காண்கிறோம்.