பதிவு செய்த நாள்
10
டிச
2015
11:12
தஞ்சாவூர்: சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோவில் நேத்ரபுஷ்கரணி குளத்தின் தென்புறத்தின் பக்கவாட்டு சுவர் நேற்றுமுன்தினம் இரவு இடிந்து விழுந்தது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காவது படை வீடாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. இக்கோவில், 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலின் கிழக்குப்புறவாயில் எதிரில், நேத்ரபுஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு புஷ்கரணியில் தெப்பக் காட்சி நடைபெறும். திருக்குளமான நேத்ரபுஷ்கரணி கிழக்கு மேற்காக, 200 அடி நீளமும், தெற்கு, வடக்காக, 150 அடி அகலம் கொண்டது. 4 அடி உயரம் உடையது. பழமை வாய்ந்த திருக்குளம் மண் சுவர், சுண்ணாம்பால், 150 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் குளத்தின் தெற்குப்புற சுற்றுச்சுவர் மண் சுவராக இருந்ததால், அதன் மீது 3 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டு, அதன் மேல் கிரில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்து வருவதால், குளத்தின் தென்புற பகுதியின் அடிப்புறம் உள்வாங்கியதால், நேற்றுமுன்தினம் இரவு, 10.30 மணிக்கு செங்கல் சுவர், 50 அடி நீளத்திற்கு கிரில் கேட்டுடன் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்தினர், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணஸ்தபதி ஆகியோர் பார்வையிட்டனர்.