பதிவு செய்த நாள்
10
டிச
2015
03:12
தமக்கு வேண்டிய அனைத்தையும் அன்னை காளியிடமே கேட்டுப் பெறும் ஸ்ரீராமகிருஷ்ணர், மாதங்கினி தேவியிடம், நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் தருவாயா? என்று கேட்கிறார். குருதேவா, நீங்கள் எதைக் கேட்டாலும் நான் கண்டிப்பாகத் தருவேன் மாதங்கினி தேவி. உன் மகனை எனக்குக் கொடு, அவனை என்னுடன் வாழ அமைதி, ஏனெனில் அவன் மிகப் புனிதமானவன். எதை வைத்து அவன் புனிதமானவன் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரீகுருதேவர்? ஓர் அதீதக் காட்சி கண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். கழுத்து நிறைய நகைகளை அணிந்த ஒரு தேவி. அவளைச் சுற்றி திவ்யாம்சம் கொண்ட தோழியர். ஆஹா.... மூலப் பிரக்ருதியான ஆத்யா சக்தியும், ஸ்ரீகிருஷ்ணரைத் தம் பிரேமையினால் இதயத்தில் கட்டி வைத்தவளுமான ஸ்ரீராதை அல்லவா, அந்த தேவி! ஸ்ரீராதையின் அம்சமாகப் பிறந்த இவனது உடல், ஏன் எலும்பு மஜ்ஜைகூட எவ்வளவு புனிதத்துடன் திகழ்கிறது! ஆம், அவன் நித்யசித்தன். ஈசுவரக்கோடிகளில் ஒருவன் என்று குருதேவருக்குப் புரிந்தது.
யார் அவர்?
அவர்தான் பாபுராம் மகராஜ் என்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தர். யாரிடமும் எதையும் எதிர்பாராமல் அன்பு செய்தல், அவர்களிடம் பொதிந்துள்ள தெய்விகத்தை மலரச் செய்தல், எல்லாவற்றிற்கும் மேலாகத் தூய துறவற வாழ்வு- இது பிரமோனந்தரின் வாழ்க்கைச் சாரம். 1861, டிசம்பர் 10-இல் மேற்கு வங்கம், ஆன்ட்ப்பூரில் பிறந்த பாபுராம் கிராமத்துப் பள்ளியில் படிப்பு முடித்து கல்கத்தாவிற்கு வந்தான். குருதேவரின் இல்லற பக்தரும் பாபுராமின் சகோதரியின் கணவருமான பலராம் பாபுவின் வீட்டில் வாசம் செய்தான். படிப்பைவிட ஆன்மிகத்தையே பாபுராமின் உள்ளம் நாடியது. ஒரு குருவையும் தேடியது. ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி அறிந்தும் கொண்டது. ஒரு நாள் ஹரி சபைக்கு பாகவதச் சொற்பொழிவு கேட்கச் சென்றான் பாபுராம். ஆடாமல், அசையாமல் புறவுலகு பிரக்ஞையின்றி அதோ, அங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் அமர்ந்திருக்கிறாரே... ஓ!... அவரை தரிசித்த மாத்திரத்தில் பாபுராமின் உடல் சிலிர்த்தது.
எத்தகையதோர் அசாதாரணமான திருமுகம்! மலர்ந்த முகமண்டலத்தில்தான் என்ன ஓர் ஆனந்தம்! வியத்தகு புன்னகை! என் வகுப்புத் தோழன் ராக்கால் இவரைப் பார்க்கப் போகிறானாமே. அவனிடம் இவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுழன்றது பாபுராமின் சிந்தனை. மெட்ரோபாலிடன் பள்ளி. மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, இரண்டு பையன்கள் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பாபுராம்: ராக்கால், தட்சிணேசுவரத்தில் பெரிய சாது யாராவது இருக்கிறாரா?
ராக்கால்: இருக்கிறாரே, நீ அவரைத் தரிசிக்க வேண்டுமா?
பாபுராம்: நிச்சயமாக. நீ அவரைப் பார்த்திருக்கிறாயா? அவர் எப்படிப்பட்டவர்?
ராக்கால்: நான் பார்த்திருக்கிறேன். ஏன் நீயே போய் பார்த்து அவரைத் தெரிந்து கொள்ளக் கூடாது? அங்கேயே தங்கலாம்.
1882 ஏப்ரல் 8, சனிக்கிழமை. பாபுராம் வாழ்வில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் குருதேவரைத் தரிசிக்க பாபுராம் சென்றான். அவனோடு ராக்காலும் ராம்தாயாளும் சென்றனர். மாலை இருள் கவ்வும் வேளை. பொதுவாக அந்த வேளையில் குருதேவர் புறவுலகை மறந்து திவ்ய உலகில் சஞ்சரிப்பது வழக்கம். இதோ, குருதேவர் அறைக்கு அவர்கள் வந்து விட்டார்கள். ஆனால் திவ்யநாதன் அங்கில்லை. காளிகோயிலுக்குப் போயிருக்கிறார் அங்குள்ள ஒருவர் கூறியதும் பாபுராமுக்குச் சற்று ஆறுதல் உண்டாயிற்று.
ராக்கால்: பாபுராம் நீ இங்கேயே இரு. நான் போய் அவரைக் கூட்டி வருகிறேன்.
சற்று நேரம் கழிந்தது.
அதோ குருதேவர் ராக்காலுடன் வருகிறார். ஆனால் அவர் நடப்பதற்கே சிரமப்படுகிறாரே. அவருக்குப் புறவுலக நினைவே போய்விட்டதோ!
ராக்கால் குருதேவரைச் சிறிய கட்டிலில் அமர வைத்தான். எல்லாரும் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்னை காளி அவருக்கு என்ன உணர்த்திக் கொண்டிருக்கிறாளோ? யாருக்குத் தெரியும்!
ஆஹா, குருதேவருக்கு நினைவு திரும்புகிறது. அவர் பாபுராமையே பார்க்கிறார்.
ராம்தயாள்: இவனது பெயர் பாபுராம். பலராம் போஸின் மைத்துனன்.
குருதேவர்: ஓ, நீ பலராமின் சொந்தக்காரனா? அப்படியென்றால் எங்களுக்கும் சொந்தக்காரன். நீ எந்த ஊர்க்காரன்?
பாபுராம்: ஆன்ட்ப்பூர்.
குருதேவர்: ஓ! நான் அங்கே சென்றிருக்கிறேன். சரி, அது இருக்கட்டும், கொஞ்சம் இங்கே வா. வெளிச்சத்தில் உன் முகத்தைப் பார்க்க வேண்டும்.
பாபுராமின் முகம், பாதங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகப் பார்க்கிறார் குருதேவர், அவனது கையைத் தம் கையில் வைத்து எடை போடுகிறார்.
தெரிந்துவிட்டது.
ஆம், இவன் திவ்யமானவன். பிறகு, பிறகென்ன? லௌகீக வேலைகள் முதல் ஆத்மஞானம் பெறுவது வரை பாபுராமிற்குப் பயிற்சிதான். அதனால்தானனோ என்னவோ பிற்காலத்தில் பேலூர் மடத்தில் பிரம்மசாரிகளுக்கும் இளம் சாதுக்களுக்கும் பாபுராம் மகராஜ் கொடுத்த பயிற்சிகளும் பணிகளும் அவர்களின் மாசுகளை அகற்றி, தங்கமாகப் பிரகாசிக்க வைத்தன.
குருதேவர் பக்தர்களிடமும் சாதகர்களிடமும் பொழியும் அதே திவ்ய அன்பை பிரேமானந்த மலரிடமிருந்து பெற வண்டுகள் போல பேலூர் மடத்தில் மொய்த்த மாணவர்கள், இளைஞர்கள், பக்தர்கள் ஏராளம்.
பக்தர்களுக்குச் சேவை செய்வதில் நேரம் காலமே தெரியாது அவருக்கு!
கூட்டம் சமாளிக்க முடியவில்லை. மடத்து நிர்வாகப் பொறுப்பில் இருந்த சுவாமி ஒருவர் சுவாமி பிரம்மானந்தரிடம் (ராக்கால் மகராஜ்) பக்தர்கள் தங்குவதற்கு சில விதிகளை வகுக்க ஆலோசனை கூறினார். உடனே இடைமறிந்த பாபுராம் மகராஜ், இதோ பார், நாங்கள் இருக்கும்வரை இதே நியதிகள் தொடரும். நாங்கள் மறைந்த பிறகு வேண்டுமானால் பக்தர்களுக்கு ஓட்டலோ ஏதோ கட்டிக் கொள்ளுங்கள். குருதேவரே பக்தர்களை இங்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கும் அவருக்காக எல்லாம் கொண்டு வருகிறார்கள். அதுபோலவே அவரே அவர்கள் மூலம் உணர்கிறார். அவரேதான் உணவளிக்கவும் செய்கிறார். இதில் நாம் என்ன சொல்ல இருக்கிறது என்றார் முகம் சிவக்க. ஆம், அந்தப் பிரேம வடிவம் தன் பிரேமையைக் காட்டுவது பக்தர்களிடமா? இல்லையில்லை. சாட்சாத் குருதேவரிடம். அவர் அகத்திலும் புறத்திலும் எங்கும் குருதேவர் மயமே! பேலூர் மடத்தின் எல்லாச் சக்தியும் பக்தியும் ஞானமும் ஓர் உருவாகி கங்கைக் கரையில் நடமாடியது என்று சிலாகித்த ஸ்ரீசாரதையின் பாபுராம் மகராஜ் மறையும் காலம் வந்துவிட்டது. உடல் நலம் குன்றிக் கிடக்கிறார் சுவாமிகள்.
தம்மைக் காண வந்த சுவாமி சாரதானந்தரிடம் கூறினார். நான் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும் மல்லிகைப் பூ போன்ற வெண்மையான அரிசிச் சோறு உண்ண வேண்டும். சுவாமி சாரதானந்தருக்குப் புரிந்துவிட்டது. பாபுராம் மகராஜ் விரும்பிய இந்த இரண்டும் ஸ்ரீராதைக்கு மிகவும் பிரியமானவை. ஆம், அந்த பிரேமானந்த மலர் தன் நிஜ சொரூபமான ஸ்ரீராதையின் திருவடியில் சேர்ந்து ஒன்றாகிவிட்டாலும், அதன் சுகந்தம் ஸ்ரீராம கிருஷ்ண மடங்களில் இன்றும் வீசி வருவது எளிய உள்ளங்களின் இனிய உண்மை!