மதுரை மாவட்டம், எம். சுப்புலாபுரம் சிலார் பட்டியில் உள்ள ஸ்ரீகாலதேவி அம்மன் கோயில் இரவில் மட்டுமே திறந்திருக்கும். இதன் கருவறையும், விமானமும் எண்கோண வடிவில் உள்ளன. காலச்சக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் காலதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோயிலை வலமிருந்து இடமாக 11 முறையும், இடமிருந்த வலமாக 11 முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும். அதன்பின், சன்னிதி முன் இருக்கும் காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து தியானம் செய்து தேவிக்கு விளக்கேற்றி வழிபட்டால் துன்பம் நீங்குவதோடு நல்ல நேரம் வந்து விடும் என்பது நம்பிக்கை.